பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பணிகளை பாரதிய ஜனதா மேலிடம் முடுக்கி விட்டு உள்ளது. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகளுக்கான பொறுப்பாளர்களாக சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் தற்போது பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
பிப்ரவரி 2-வது வாரம் அந்த பயணம் நிறைவு பெற உள்ளது. இது தொடர்பான விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக பா.ஜ.க. மேலிட தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகம் வந்து பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்க முடிவு செய்துள்ளனர். அதன்படி அடுத்த வாரம் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தமிழகம் வர உள்ளார். இதற்கிடையே பாரதிய ஜனதா தேசிய தலைவர் நட்டா 11-ந்தேதி தமிழகம் வர திட்டமிட்டுள்ளார். அவர் பாரதிய ஜனதாவின் தேர்தல் பணிகளை தொடங்கி வைத்து பிரசாரத்தையும் ஆரம்பித்து வைப்பார்.
அதுமட்டுமின்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் அவர் சில முக்கிய முடிவுகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்த வாரம் தொடங்கி 2-வது வாரம் வரை தமிழக பாரதிய ஜனதா வட்டாரத்தில் மிகவும் விறுவிறுப்பு நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.