வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதியை எதிர்த்து, ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் தமிழிசை சவுந்திரராஜன், காங்கிரஸ் பாரம்பரியத்தில் இருந்து பாஜகவிற்கு வந்தவர், தென்சென்னை மாவட்டத் தலைவர் ‘லேலண்ட்’ சீனிவாசனைச் சந்தித்து 1999-ல் பாஜக உறுப்பினரானார் தமிழிசை. இதனை தொடர்ந்து பாஜகவின் வளர்ச்சிக்காக பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார். அடிமட்ட தொண்டரில் ஆரம்பித்து அவரது பணி தமிழக பாஜக மாநில தலைவராக உயர்ந்த்தியது.

கட்சி உறுப்பினரான 15 ஆண்டுகளில் மாநிலத் தலைவராகிவிட்டார் தமிழிசை. தாமரை மலந்தே தீரும் என்னும் அவரது முழக்கம் தமிழகம் முழுவதும் வேகமாக பரவியது. இதனையடுத்து கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் அதிகரித்தது. தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் பாஜகவை வளர்க்க தீவிரமாக களத்தில் இறங்கினார்.

கமலாலயத்தில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் ‘மக்கள் சந்திப்பு’ என்ற பெயரில், பொதுமக்களிடம் புகார் மற்றும் கோரிக்கை மனுக்களைப் பெறுவதை வழக்கமாக வைத்திருந்தார். மக்கள் பணிகளிலும் கட்சி பணியிலும் தீவிரமாக இருந்தவர் பல முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார். ஆனால் வெற்றி வாய்ப்பு தான் நழுவிக்கொண்டே சென்றது. கடைசியாக 2019ஆம் ஆண்டு தூத்துக்குடி தொகுதியில் கனிமொழிக்கு எதிராக போட்டியிட்டவர் சுமார் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இதனால் சற்று சோர்ந்து போன தமிழிசைக்கு பாஜக உற்சாகப்படுத்தியது.

மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலையே தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டார். இவரது பணியை மேலும் அங்கீகரிக்கும் வகையில் புதுவைக்கும் துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் ஆளுநர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்த நிலையில், தமிழக அரசியலில் திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். தமிழக சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் அவ்வப்போது கேள்வி எழுப்பினார் தமிழிசை. இதனால் மீண்டும் அரசியல் களத்திற்கு திரும்ப தமிழிசை முயற்சிப்பதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் களத்தில் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக சார்பாக வேட்பாளர் பட்டியல் வெளியான பின்பு ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாவும், எனவே மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும் தகவல் வெளியானது. மற்றோரு தரப்போ இல்லைவே இல்லை விருதுநகர் அல்லது தென் சென்னை தொகுதியில் போட்டியிடவே அதிக வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

கனிமொழியை எதிர்த்து போட்டியிடுமாறு மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal