நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் திமுக அமைத்த தொகுதி பங்கீட்டு குழு காங்கிரஸ் கட்சியுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அடுத்தாக வருகின்ற பிப்ரவரி 3-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும், பிப்ரவரி 4-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் மதிமுகவுடனும் மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுகவின் கூட்டணி தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது.

கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுகவிற்கு பின்னடைவே ஏற்பட்டது. இதன் காரணமாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் தோல்வியே கிடைத்தது. இதனையடுத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் தமிழகத்தில் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது என உணர்ந்த அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. இதனையடுத்து மிகப்பெரிய கூட்டணியை அமைக்க அதிமுக தலைமை திட்டமிட்டது. குறிப்பாக பாமக, தேமுதிக, தமாக உள்ளிட்ட கட்சிகளை இணைக்க விரும்பியது. இதே போல பாஜக தலைமையும் பாமக, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக சார்பாக பாமக மற்றும் தேமுதிகவிடம் தங்கள் விருபப்படும் தொகுதிகள் எது.? எதிர்பார்ப்புகள் என்ன என விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் நாளை நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகே கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்படும் எனவும், இதுவரை அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கவில்லையென பாமக வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் தி.மு.க. பக்கம் விடுதலை சிறுத்தைகள் இருப்பதால், பா.ம.க. அந்தப் பக்கம் போக வாய்ப்பில்லை. அதே சமயம், தே.மு.தி.க. பற்றி கடந்த தேர்தலில் துரைமுருகன் ஓபனாக பேசியதை பிரேமலதா விஜயகாந்த் இன்னும் மறக்கவில்லை. எனவே, இரு கட்சிகளும் கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal