ஆளும் தி.மு.க. அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக விமர்சனங்களை வைத்து வரும் சவுக்கு சங்கர், ‘வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை தன்னை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளார்கள்’ என பகீர் தகவலை கிளப்பியிருக்கிறார்.
அரசு ஊழியராக இருந்த சவுக்கு சங்கர், அரசுக்கு எதிராக ஆவணங்களை வெளியிட்ட காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சமூகவலைதளத்தில் அதிமுக மற்றும் திமுகவிற்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். கடந்த ஆண்டு நீதிபதியை விமர்சனம் செய்த காரணத்தால் போலீசார் அவரை கைது செய்தனர். இதனை அடுத்து அவர் மீது அவதூறு கருத்துகளை பரப்பியதாக பல புகார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதன் காரணமாக சவுக்கு சங்கர் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சுமார் 10 மாத காலத்திற்கு பிறகு சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து பல்வேறு யூடியூப் சேனலில் திமுக அரசின் செயல்பாடுகளை நாள்தோறும் விமர்சித்து வந்தார். இதன் காரணமாக பல இடங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்தநிலையில் சென்னையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் திட்டமிட்டது. இதற்காக பரந்தூர் பகுதியில் நிலம் ஆக்கிரமிக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த ஓராண்டாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேச சவுக்கு சங்கருக்கு போராட்டாளர்கள் அழைப்பு விடுத்தனர்.
இதனை ஏற்று சவுக்கு சங்கர் போராட்டத்திற்கு சென்றார். அப்போது தனியாக சென்று போராட்டத்திற்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், தன்னுடன் சிலரை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும் சவுக்கு சங்கருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசாருக்கு மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியானது.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சவுக்கு சங்கர் அரசை விமர்சித்து பேசினார். இதனையடுத்து சவுக்கு சங்கர் மீது 4 பிரிவுகளில் சுங்குவார்சத்திரம் போலீசார் அதிரடியாக வழக்குப்திவு செய்துள்ளனர். அதில் ஒன்று ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவாக உள்ளது.அதாவது சவுக்கு சங்கர் மீது சட்டப்பிரிவு 147 (கலவரம் செய்தல்), 294 பி (அவதூறு பரப்புதல்), 506 (1) (கொலை மிரட்டல்), 353 (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதன் காரணமாக எந்த நேரத்தில் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள பதிவில், தன்னை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். எனவே இந்த வழக்கிற்காக தான் முன் ஜாமின் பெற மாட்டேன் என்றும், எங்கும் ஓடி ஒளிய மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் முடியும் வரை தன்னை சிறையில் அடைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.