ஆளும் பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணியை ஆரம்பித்தனர். அதன் பிறகு தொகுதி பங்கீட்டில் காங்கிரசை மம்தா, கெஜ்ரிவால் ஆகியோர் ஓரங்கட்டினார்கள். நிதீஷ்குமார் ஒரு படி மேலே போய் பா.ஜ.க. கூட்டணியிலேயே இணைந்துவிட்டார்.

இந்த பின்னணியில் தமிழ்நாட்டில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி நேற்று தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தியது. திமுக கூட்டணியில் 15 தொகுதிகள் கேட்பது என்பது காங்கிரஸாரின் கருத்தாக இருந்தது. ஒரு கட்டத்தில் 18 தொகுதிகள் கேட்போம் என சொல்லி வந்தனர் காங்கிரஸ் தலைவர்கள். திமுகவுடனான நேற்றைய பேச்சுவார்த்தையின் போது காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளை கேட்பதாக தகவல்கள் பரவின. ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இதனை அவசரம் அவசரமாக மறுத்து அறிக்கையும் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் விசாரித்த போது, காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 4 தொகுதிகள்தான் கொடுக்க முடியும் என திமுக தரப்பில் முதலில் தெரிவிக்கப்பட்டது. அதுவும் நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள்தான் என திட்டவட்டமாகவும் தெரிவித்ததாம் திமுக. இதனை எடுத்த எடுப்பிலேயே காங்கிரஸ் நிராகரித்துவிட்டது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மிக அதிகபட்சமாக திண்டுக்கல், கரூர் தொகுதிகளை உள்ளடக்கி 6 முதல் 7 இடங்கள்தான் கிடைக்கும் என்பது திமுகவின் திட்டவட்டமான நிலைப்பாடு. 15, 18, 21 என ஒரேடியாக கற்பனையில் மிதந்து கொண்டிருந்த காங்கிரஸுக்கு அறிவாலயம் தந்த பதில் ரொம்பவேஅதிருப்தி அடைய வைத்துவிட்டதாம். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் நொந்து நூலாகிப் போயுள்ளனராம்.

திமுக கொடுக்கும் 6 அல்லது 7 தொகுதிகளை மட்டும் பெற்றுக் கொண்டு வெல்வதற்கான வாய்ப்புகளை பார்ப்பதா? அல்லது கவுரவம் பார்ப்பதா? என கையைப் பிசைந்துகொண்டிருக்கிறார்கள் கதர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal