நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கவுள்ளது உறுதியான நிலையில், ‘தமிழக முன்னேற்ற கழகம்’ என கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தமிழக அரசியலில் சினிமா பிரபலங்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. எம்.ஜி.ஆர், கலைஞர் தொடங்கி விஜயகாந்த் வரை தமிழ்நாட்டில் அரசியல்கட்சி தொடங்கி வெற்றிகரமாக நடத்திய பிரபலங்கள் பலரும் சினிமாவில் இருந்து வந்தவர்கள் தான். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் என அரசியலில் சாதித்த சினிமா பிரபலங்கள் இருந்தாலும், இதே அரசியலில் கால் வைத்து வழுக்கி விழுந்தவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள்.

பாக்கியராஜ், சிவாஜி கணேசன், டி.ராஜேந்தர் போன்றவர்களால் சினிமாவில் சாதித்த அளவு அரசியலில் சாதிக்க முடியவில்லை. இப்படி சினிமா பிரபலங்களுக்கு அரசியல் பல பாடங்களை கற்றுக் கொடுத்து இருந்தாலும் அதன்மீதான மோகம் என்பது கோலிவுட் நட்சத்திரங்களிடம் குறைந்தபாடில்லை. அந்த வரிசையில் புதிதாக அரசியலுக்குள் எண்ட்ரி கொடுக்க முடிவெடுத்து உள்ளவர் தான் நடிகர் விஜய்.

இவர் தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் தொடர்ந்து பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து தற்போது முழுவீச்சில் அரசியலில் நுழைய முடிவெடுத்துவிட்டார். அநேகமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்து வரும் கோட் திரைப்படம் தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என்கிற பேச்சும் பரவலாக கோலிவுட்டில் அடிபட்டு வருகிறது. மறுபுறம் தன் அரசியல் கட்சியை பதிவு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார் விஜய்.

வருகிற பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை பதிவு செய்ய திட்டமிட்டு உள்ளாராம். இந்த நிலையில், நடிகர் விஜய் தனது கட்சிக்கு என்ன பெயர் வைத்துள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது. அதன்படி அவர் ‘தமிழக முன்னேற்ற கழகம்’ என தனது அரசியல் கட்சிக்கு பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுக, அதிமுக-வுக்கு போட்டியாக விஜய் தொடங்க உள்ள இந்த தமுக கட்சி எந்த அளவுக்கு வளர்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal