ம.தி.மு.க. தொண்டர்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ம.தி.மு.க. தொலை நோக்கு பார்வையில் எடுத்த முடிவு அடிப்படையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் 2021-ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல்களை சந்தித்தோம். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலையும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உறுதியாக இருந்து களம் காண இருக்கிறோம்.

கடந்த 30 ஆண்டுகாலமாக நாம் சந்திக்காத சோதனைகள், ஏளனங்கள் இல்லை. அவற்றையெல்லாம் உரமாக்கி, மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா கற்றுத் தந்த அரசியலின்படி உறுதியுடன் பயணித்து வருகிறோம். கொள்கை கொடியை உயர்த்திப் பிடிக்கும் திராவிட இயக்கத்தின் ஒரு கூறாக ம.தி.மு.க. தமிழக அரசியல் களத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. வரும் 2024-ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தல், ம.தி.மு.க.வுக்கு மிக முக்கியமான தேர்தலாகும். இத்தேர்தலில் தனித்தன்மையுடன் களம் காண இருக்கிறோம்.

கட்சியின் கட்டமைப்பு வலுப்பெற்று திருத்தணி முதல் குமரி வரை எழுச்சி பெற்றிருக்கிறது. தேர்தலுக்காக வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கும் பணியை மாவட்டச் செயலாளர்கள் பெருமளவில் முடித்து விட்டனர். பிப்ரவரி 3-வது வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் நிதி திரட்டும் பணிகளை முடிக்கும் வகையில் பிப்ரவரி 11 முதல் நிதி அளிப்புக்கான நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. எனவே, குறிப்பிட்ட தேதிக்குள் நிதி திரட்டும் பணியை முடித்து தேர்தலில் மதிமுகவை வெற்றிகரமாக களம் காணச் செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal