தமிழக முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி காரில் திருச்சி வந்தார். அவருக்கு புதுக்கோட்டை மாவட்டம்  விராலிமலை செக்போஸ்ட் அருகே முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு கூடியிருந்த மக்களை பார்த்ததும் எடப்பாடி பழனிசாமி காரை விட்டு இறங்கி அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடிக்க கூடியவர்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில்  வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் திறம்பட செயல்பட்டு தமிழகத்தில் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்க உறுதுணையாக இருந்தவர் விஜயபாஸ்கர்.  அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் விராலிமலை உள்ளடக்கிய புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் 50 ஆண்டுகால கனவு திட்டமான காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது.

முதலமைச்சர்  ஸ்டாலினுக்கு வருகிற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் காவிரி குண்டாறு வைகை இணைப்பு திட்டம்  செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக், அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம், இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது.

இதற்கெல்லாம் வருகிற தேர்தலில் விடிவு பிறக்கும். தீய சக்தியான தி.மு.க.வை மக்கள் விரட்டியடிப்பார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக இந்த கூட்டமும் மக்கள் முகத்தில் தெரியும் பிரகாசமும் அமைந்துள்ளது. விராலிமலை சட்டப்பேரவை தொகுதி உள்ளடங்கியுள்ள கரூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்து வருகின்ற பாராளுமன்ற  தேர்தலில் தி.மு.க.விற்கு மரண அடி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், விராலிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் பழனியாண்டி, மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, ஒன்றிய செயலாளர்கள் நாகராஜன்(தெற்கு), ராஜேந்திரன்(வடக்கு), திருமூர்த்தி(கிழக்கு) உள்பட பலர் கலந்துகொண்டனர்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal