கடலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் என் மண், என் மக்கள்  நடைபயணம்  மேற்கொண்ட பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை,  3-வது நாளான நேற்று பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் அருகில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக வந்து பஸ் நிலையம் அருகில் நடைபயணத்தை முடித்தார். அங்கு திறந்த வேனில் நின்றபடி அண்ணாமலை பேசியதாவது:- “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். தமிழகத்தில் சாதியை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

மதத்தை  மையப்படுத்தி அரசியல் நடக்கிறது. ஆனால் மத்திய பா.ஜனதா ஆட்சி நேர்மையான முறையில் நடக்கிறது. ஆகவே 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடியை 3-வது முறையாக நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். திராவிட கட்சிகள் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தும் பண்ருட்டியில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை கொண்டு வரவில்லை. சேமிப்பு கிடங்கு அமைக்கவில்லை. குளிர்பதன கிடங்கு அமைக்கவில்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார். பண்ருட்டி தொகுதியில் உள்ள கோரிக்கையையே நிறைவேற்றவில்லை பிறகு எப்படி 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார்.

மறைந்த விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தவர் பிரதமர் நரேந்திரமோடி. வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் ஒரு மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் பா.ஜனதா உங்கள் அன்பை பெற்று ஆட்சிக்கு வரும்போது, முதல் நாள் டாஸ்மாக் கடைகளை மூடி விட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும்”,  இவ்வாறு அவர்  பேசினார்.

குடியரசு தினத்தையொட்டி பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை படைவீட்டம்மன் கோவில் தெருவில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அண்ணா மலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘இந்தியா கூட்டணி சீட்டு கட்டு போல், ஒவ்வொரு முறை குலுக்கிபோடும் போதும் ஜோக்கர் வெளியே வருவது போல, ஒவ்வொரு தலைவர்களாக வெளியேறி வருகிறார்கள். நிதிஷ்குமாரும் வெளியேறுகிறார். மோடியை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை காரணத்திற்காக மக்கள் மனநிலைக்கு எதிராக நடந்தால் இதுதான் நடக்கும்’, இவ்வாறு அவர் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal