‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் உதவி எங்களுக்குத் தேவையில்லை’ என காங்கிரஸ் காட்டமாக பேசியிருப்பதால், இந்தியா கூட்டணியில் இருந்து மம்தா விலகுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் 28 கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணி தலைவர்கள் 4 ஆலோசனை கூட்டங்களை முடித்துள்ளனர். காணொலி வாயிலாக ஒரு கூட்டம் நடந்து முடிந்தது.

தற்போது ஒவ்வொரு மாநிலங்கள் வாரியாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் சில மாநிலங்களில் தொகுதி பங்கீடு பிரச்சனையின்றி முடிய உள்ளது. ஆனால் சில மாநிலங்களில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தமட்டில் ஆளும் கட்சியான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ளன. கடந்த 2019 தேர்தலில் 42 தொகுதிகளில் மம்தா பானர்ஜி கட்சி 22 தொகுதி, பாஜக 18, காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

இதனால் வரும் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தற்போது ஜெயித்துள்ள அதே 2 தொகுதிகளை மட்டுமே வழங்க மம்தா பானர்ஜி விரும்புவதாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி உடன்படவில்லை. நாங்கள் என்ன பிச்சையா கேட்கிறோம் என காங்கிரஸ் மாநில தலைவரும் எம்பியுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.

இதனால் இருகட்சி தலைவர்கள் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் நேற்று முன்தினம் மம்தா பானர்ஜி தனது பேரணியில் பேசுகையில், ‘‘பாஜகவை தனித்து எதிர்த்து போராட எனக்கு உறுதி உள்ளது. ஆனாலும் சீட் பங்கீட்டில் எங்களது வார்த்தையை சிலர் (காங்கிரஸ் தலைவர்கள்) கேட்க விரும்பவில்லை. உங்களால் பாஜகவை எதிர்த்து போராட முடியாவிட்டால் தொகுதியையும் கேட்காதீர்கள்’’ என கூறினார்.

இந்நிலையில் தான் மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் எம்பியும், மேற்கு வங்க மாநில எம்பியுமான ஆதீர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது:

‘‘நாங்கள் ஒன்றும் மம்தா பானர்ஜியின் உதவியுடன் போட்டியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு தனது சொந்த பலத்தில் எப்படி போட்டியிட வேண்டும் என்பது நன்கு தெரியும். அதேவேளையில் மம்தா பானர்ஜி ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் ஆதரவால் தான் அவர் மேற்குவங்கத்தில் அதிகாரத்தில் உள்ளார்’’ என பதிலடி கொடுத்துள்ளார்.

நாங்கள் ஒன்றும் மம்தா பானர்ஜியுடன் சேர்ந்து போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை என ஆதீர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ள நிலையில் மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தமட்டில் ‘இந்தியா’ கூட்டணி உடைகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal