தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அமைச்சர்களின் இந்த புதிய வியூகர் அவர்களுக்கு கைகொடுக்குமா..?

கடந்த 2006-&2-011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனும் பதவி வகித்தனர். இந்த காலக் கட்டத்தில், இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லாததால் இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுகளை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யாத நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்தார். இதுதொடர்பாக நீதிபதி மீது திமுகவின் ஆர்.எஸ்.பாரதி நேரடியாகவே குற்றச்சாட்டை முன்வைத்தார். மறு ஆய்வு வழக்குகளில் இருந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விலக வேண்டும் எனவும், வேறு நீதிபதி விசாரிக்கவும் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு மறு ஆய்வு வழக்குகளின் விசாரணை பிப்ரவரி 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை தினசரி அடிப்படையில் நடைபெறும் என நீதிபதி அறிவித்துள்ளார். மேலும் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் பிப்ரவரி 19ம் தேதி முதல் 22ம் தேதி வரையும், அமைச்சர் ஐ. பெரியசாமி வழக்கில் பிப்ரவரி 12ம் மற்றும் 13ம் தேதிகளிலும் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை பதில் மனு அல்லது எழுத்துப்பூர்வ வாதமாக ஜனவரி 30ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அதில், உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிரான மறு ஆய்வு வழக்குகளை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.

தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் தொடர்ந்துள்ள வழக்குகள் தொடர்பாக தமிழ்நாடு பாஜக மற்றும் அதிமுகவின் ஜெயக்குமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருவருடைய வழக்குகளிலும் தங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று அதில் தெரிவித்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal