‘அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் உறவு இருக்கிறது என்பது முற்றிலும் தவறு! தி.மு.க. தான் தற்போது பா.ஜ.க.விடம் நெருக்கம் காட்டி வருகிறது. மறைமுக உறவையும் வைத்திருக்கிறது’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.
2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதனைத்தொடர்ந்து அதிமுகவினர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தர்மயுத்தம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் மரண அடி கொடுத்துள்ளது. இனி எந்த காலத்திலும் ஓபிஎஸ், அதிமுக உறுப்பினர் என்று கூறிக்கொண்டு அதிமுக கரை வேட்டியை கட்டவோ, அதிமுக சின்னம் கொண்ட லெட்டர் பேடுகளை உபயோகிக்கவோ முடியாது.
இனி எந்த காலத்திலும் ஓபிஎஸ் அதிமுக என்று சொல்ல முடியாது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அதிமுக மற்றும் பொதுமக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். எந்த வகையிலாவது குழப்பத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என வக்கிர புத்தியோடு பல்வேறு முறை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு ‘குட்டு’ வாங்கிய ஓபிஎஸ்க்கு உச்சநீதிமன்றம் கொடுத்தது மரண அடி.” என்றார். மேலும் பேசிய ஜெயக்குமார், “ரோம் நகர் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னன் போல் இருக்கிறார் ரோபோ மன்னன் ஸ்டாலின். சட்டம், ஒழுங்கை சீரழித்துவிட்டு தமிழ்நாடு உரிமை மீட்பு மாநாடு நடத்துவதா? திமுகதான் பாஜகவோடு ரகசிய பேச்சு நடத்துகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வருகின்றன. அதிமுக, பாஜகவோடு ரகசியமாக கூட்டணியை தொடர்வதாக திமுக விமர்சித்து வருகிறது. அதேசமயம், பிரதமர் மோடி உடன் நெருங்கி வரும் திமுக, ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிமுகவின் ஜெயக்குமார் கூறியுள்ளார்.