தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., கொடியேற்றுகிறார். இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் வரவேற்கிறார். எனவே, இன்றே களைக்கட்டத் தொடங்கிவிட்டது.

திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன் பாளையத்தில் வரும் நாளை அதாவது 21-ம் தேதி நடக்கிறது. நாளை காலையில், 9 மணிக்கு கொடியேற்றத்துடன் இந்த மாநாடு துவங்குகிறது.

இதற்காகவே, மாநாட்டு திடலில் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பத்தில் திமுக கொடியை துணை பொதுச் செயலாளரும், எம்பி-யுமான கனிமொழி ஏற்றி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் கொடிக்கம்பத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். பிறகு, நிகழ்ச்சியின் நுழைவாயில்களை எழிலரசன் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து 22 பேச்சாளர்கள் மொழிப்போர் தியாகிகள், மாநில சுயாட்சி, கல்வி உள்ளிட்ட தலைப்புகளில் உரையாற்ற உள்ளார்கள். இதைத்தவிர, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டிமன்றம், இசைக் கச்சேரி, நடனம், நாடகம் என பல கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திமுக இளைஞரணி துணைச்செயலாளர் தூத்துக்குடி ஜோயல் வரவேற்கிறார். காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை பல்வேறு தலைப்புகளில் கட்சி பிரமுகர்கள், அமைச்சர்கள் உரையாற்றுகின்றனர்.

திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டில் 5 லட்சம் தொண்டர்கள் உட்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கு பெற உள்ளதால் சேலம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மாநாடு நடைபெறும் இடம் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளதால் சேலம் மாவட்ட காவல்துறை ஆங்காங்கே போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாடு குறித்து அமைச்சர் நேரு சொல்லும்போது, “நாளை நடைபெற உள்ள மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, உணவு வசதி போன்றவை செய்யப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில் இருந்து மட்டும் 1200 பஸ்களில் தொண்டர்கள் மாநாட்டுக்கு வருகை தர உள்ளனர். பாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஏற்பாட்டின் தொடக்கமாக அமையும் முன்னோட்டமாக இந்த மாநாடு அமையும். வெற்றி மாநாடாக அமையும்.

வாகனம் நிறுத்துவதற்கு 300 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு ஊரில் இருந்தும் வாகனம் வரும்போது அவர்களுக்கு ஜிபிஎஸ் நவீன வசதி செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் சைவ உணவு மற்றும் அசைவ உணவு மதியம் வழங்கும் வகையில் உணவு சமைத்து பரிமாறப்படுகிறது.

நாளை மாநாடு நடைபெறுவதையொட்டி, இன்று மாலை, 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் புல்லட் பேரணி மாநாட்டு திடலில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடக்கிறது. இதனை முதல்வர் ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும், சென்னையில் தொடங்கிய இளைஞர் அணி மாநில மாநாடு சுடர் ஓட்டம், மாநாடு திடல் வந்தடைய உள்ளது.. இதனை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல்வரிடம் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal