மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோடநாட்டில் மணி மண்டபம் அமைக்கும் பணியில் அவரது தோழி சசிகலா ஈடுபட்டுவருகிறார். இந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி, சசிகலா கோடநாடு எஸ்டேட் பயணத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து; முதலமைச்சர் ஜெயலலிதா ஏன் ஓய்வுக்காக வெளிநாடு செல்லவில்லை; அவருக்கு பிடித்தமான இடங்கள் என்ன? அவர் கோடநாடு எஸ்டேட்டில் எப்படி இருந்தார் என்பன போன்ற பல்வேறு தகவல்களை பகிர்ந்துக்கொண்டார்.

அப்போது, “இந்த இடம் (கோடநாடு) அம்மாவுக்கு (ஜெயலலிதா) மிகவும் பிடித்த இடம். அவர் இல்லாமல் என்னால் இங்கு வர இயலவில்லை. அதனால்தான் இங்கு, இத்தனை நாட்கள் வரவில்லை. இங்குள்ள தொழிலாளர்களை நாங்கள் தொழிலாளர்கள் என்று நினைத்ததில்லை. அவர்களும் தங்களை தொழிலாளர்கள் என நினைத்ததில்லை. அம்மா (ஜெயலலிதா) இந்த இடத்தில் சகஜமாக வாழ்ந்தார். ஒரு குடும்ப பெண்ணாக சாதாரண பெண்ணாக வாழ்ந்தார்.

என் சாதாரண வாழ்க்கை 7,8 வயதில் முடிந்துவிட்டது. அதை எனக்கு திரும்ப நியாபகப்படுத்தியது இந்த இடம்தான் என்பார். அவருக்கு இங்குள்ள இயற்கை சூழல் மிகவும் பிடிக்கும். சிலர் கேட்பார்கள், ஏன் வெளிநாடு போகவில்லை என்று. அவருக்கு இந்த இடம்தான் ரொம்பவும் பிடிக்கும். இந்த இயற்கை சூழலில் இருப்பதில்தான் விருப்பம் அதிகம் என்பார். இந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு ஓர் நினைவிடம் அமைக்க வேண்டும் என நினைத்தேன்.

ஜெயலலிதாவுக்காக இந்த இடம் நிலைத்து இருக்க வேண்டும் என்பதற்காக சாஸ்திரப்படியாகவும், வாஸ்துபடியாகவும் பூஜித்தோம். இந்த இடம் மனிதர்கள் பூமியில் வாழும்வரை நிலைத்திருக்க வேண்டும். இந்த வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு நாளும் ஜெயலலிதா என்னோடு இருப்பது போல் உள்ளது என நாதழுதழுக்க குரலில் பேசினார். தொடர்ந்து, அம்மாவுக்காக நிறைய செய்ய வேண்டும். அதற்காக இதில் மணிமண்டபம் போல் கட்ட உள்ளோம். ஆகஸ்ட்டில் திறப்பு விழா இருக்க வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal