காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவதற்காக ராகுல் காந்தி கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டார். அதுபோல நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கியும் பாத யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் வலியுறுத்தப்பட்டது. அதை அவர் ஏற்றுக்கொண்டார். அதன்படி மணிப்பூரில் இருந்து மும்பை வரை ராகுல் நடைபயணத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

நாளை ராகுல் தனது  நடைபயணத்தை தொடங்குகிறார். மணிப்பூர் தலைநகா் இம்பாலில் அமைந்துள்ள ஹப்தா காங்ஜிபங் அரசு மைதானத்தில் நடைபயண தொடக்க விழாவை நடத்த காங்கிரஸ் சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு மிகுந்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து இம்பால் கிழக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். தேவையற்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எழுவதைத் தவிர்க்கும் வகையில் அரசு, மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை)  குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுடன் நடைபயணத்தை கொடியசைத்து தொடங்குவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் தனது உத்தரவில் கூறி இருந்தார்.

மேலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வசதியாக, நடைபயண தொடக்க நிகழ்வில் பங்கேற்கும் நபர்கள் அனைவரின் பெயர் மற்றும் கைப்பேசி  எண்கள் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’ என்றும் அவர் கூறி இருந்தார். இந்த நிலையில், தொடக்க விழா நடக்கும் இடத்தை வேறு பகுதிக்கு காங்கிரஸ் மாற்றி உள்ளது. இது தொடர்பாக மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கெய்ஷம் மேகசந்திரா கூறியதாவது:-

நடைபயண தொடக்க விழாவை ஹப்தா காங்ஜிபங் அரசு மைதானத்தில் நடத்திக்கொள்ள அனுமதிக்கக்கோரி கடந்த 2-ந் தேதி அரசிடம் அனுமதி கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பிறகு, மாநில முதல்வர் பிரைன் சிங்கை கடந்த 10-ந் தேதி நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. இதன் காரணமாக, கடைசி நேரத்தில் இம்பாலி-லிருந்து 34 கி.மீ. தொலைவுக்கு அப்பால் கோங்ஜோம் பகுதியில்  அமைந்துள்ள தனியார் மைதானத்தில் தொடக்க விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கு தவுபால் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் நேற்று முன்தினம் இரவு அனுமதி வழங்கினார் நடைபயணத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கொடியசைத்துத் தொடங்கி வைப்பார். இவ்வாறு அவர் கூறினார். ராகுல் யாத்திரைக்கான ‘தொடக்க விழா நிகழ்விடம் மாறியபோதும், நடைபயண வழித்தடத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.  மணிப்பூரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கும் நடைபயணம், 67 நாட்களில் 15 மாநிலங்களில் உள்ள 110 மாவட்டங்கள் . வழியாக 6,713 கி.மீ. தொலைவைக் கடந்து மும்பையில் வருகிற மார்ச் 20-ந் தேதி நிறைவடைய உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal