‘சமூக நீதி, சனாதனம் குறித்து பேசும் தி.மு.க. துணை முதல்வர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொடுக்க வேண்டும்’ என கொளுத்திப் போட்டிருப்பதுதான் அறிவாலயத்தில் தொடங்கி செனடாப் ரோடு வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்திற்கு முன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகப் போகிறார் என்ற தகவல்கள் றெக்கை கட்டி பறக்கின்றன. இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினும் மறுக்கவில்லை.

இந்த நிலையில்தான் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‘‘பாகட்சித் தலைமைக்கும், ஆட்சித் தலைமைக்கும் பிறப்பின் அடிப்படையில் ஒரு குடும்பத்திலிருந்து மட்டுமே வர முடியும் என்பதுதான் திமுக மாடல், திராவிட மாடல். இது ஏற்கெனவே காங்கிரஸிலும், பல்வேறு மாநில கட்சிகளிலும் உள்ளது. ஜனநாயகத்திற்கு எதிரான, சமத்துவத்திற்கு எதிரான, சமூகநீதிக்கு எதிரான இந்த திராவிட மாடல் யாருக்கும் தேவையில்லை. பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது யாருக்கும் தெரியாது. கடைக்கோடி கிராமத்தில் உள்ள தொண்டர்கூட பாஜகவில் தலைவராக, பிரதமராக, முதல்வர்களாக வந்துவிடமுடியும்.

பெண் உரிமை பேசும் முதல்வர் ஸ்டாலின், மகள் இருந்தும் தனது அரசியல் வாரிசாக, மகன் உதயநிதியைத்தான் தேர்வு செய்துள்ளார். அரசியலில் கூட ஆணாதிக்கம்தான். இதுதான் திராவிட மாடல். சமத்துவம், சமூகநீதி பற்றியெல்லாம் ஸ்டாலின் பேசாத கூட்டமே இல்லை. ஆனால், திமுக கட்சியிலும், ஆட்சியிலும் தமிழகத்தில் 20 சதவீதத்தினருக்கும் அதிகமாக உள்ள பட்டியலினத்தவர்களுக்கு எந்த முக்கியத்துவம் வாய்ந்த பதவியும் இல்லை.

இருப்பதிலேயே உச்சபட்ச அதிகாரம் என்றால் அது, அரசியல் அதிகாரம் தான். அரசியல் அதிகாரம் கிடைத்தால் ஒரு சமூகம் தனக்கு தேவையானதை தானே எடுத்துக் கொள்ள முடியும். பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள், முதல்வர்களாக, உள்துறை, நிதி, பொதுப்பணி, தொழில் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சராகும்போது அவர்களுக்கு தேவையானதை அவர்களே செய்து கொள்ள முடியும். ஆனால், திமுக எப்போதுமே அவர்களை, கொடுக்கும் இடத்தில் வைக்காமல், வாங்கும் இடத்திலேயே வைத்திருக்கிறது. எப்போது பார்த்தாலும் நாங்கள் பட்டியலினத்தவர்களுக்கு அதை செய்தோம், இதை செய்தோம் என்று பட்டியலிட்டு கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையானதை அவர்களே எடுத்துக் கொள்ளும் வகையில் அரசியல் அதிகாரம் வழங்க வேண்டும். அதுதான் உண்மையான சமூக நீதி.

திமுக அமைச்சரவையில் பெரும் மாற்றங்கள் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் தயாராகி வருவதாக செய்திகள் வருகின்றன. இந்த அமைச்சரவை மாற்றத்திலாவது பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்வர் பதவியும், உள்துறை, நிதி, பொதுப்பணி, தொழில் ஆகிய முக்கிய துறைகளில் ஒன்றையும் வழங்குவார் என்று நான் நம்புகிறேன். பல்லாவரத்தில் பேசிய சமூக நீதியை அவர் செயலில் காட்ட வேண்டும். இதுவே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு” என்று அவர் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal