வருகிற நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியே முடிவாகாத நிலையில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் சிலரை வேட்பாளராக நிறுத்த அக்கட்சிகள் முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு மற்றும் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் வனத்துறை அமைச்சர் என்.செல்வராஜின் சகோதரர் மகன் என்.டி.சந்திரமோகன் ஆகியோர் போட்டியிருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

என்.டி.சந்திரமோகன்

தி.மு.க.

இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் உள்ள சில சீனியர்களிடம் பேசினோம். ‘‘சார், கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே அமைச்சர் கே.என்.நேருவிடம் ‘உங்களது மகனை நிறுத்துங்கள். பெரம்பலூர் தொகுதி உங்களுடைய சாய்ஸ்’ என ஸ்டாலின் சொல்லிவிட்டார். அப்போது, பணக்கஷ்டத்தில் (!?) இருந்த நேரு, பசையுள்ள பச்சமுத்துவிற்கு தொகுதியை தாரைவார்த்தார். அதனால்தான் இந்த முறை தனது மகனை நிறுத்த முடிவு செய்துவிட்டார் கே.என்.நேரு, இதற்கு தலைமையும் ஒத்துக்கொண்டது’’ என்றனர்.

பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்புகள் குறித்து உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், கடந்த சில தினங்களுக்கு முன்பு உப்பிலியபுரம், துறையூர், முசிறி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்ற அருண் நேரு கட்சி நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசுகளை வாரி வழங்கினார். இதுநாள் வரை தொழிலை கவனித்து வந்த அருண் நேரு, தற்போது பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று வருகிறார்.

அருண் நேரு ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர், இவருக்கு ஆதரவாக அதே சமுதாயத்தைச் சேர்ந்த துறையூர் மெடிக்கல் முரளி, உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் அசோகன் (இவரது தந்தை அர.நடராசன் தி.மு.க.வின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மூத்த முன்னோடிகளில் ஒருவர்), கே.என்.நேருவின் அதிதீவிர விசுவாசியாக இருந்து, சமீபகாலமாக ஒதுங்கியிருந்த சோபனபுரம் கண்ணனும் தற்போது களத்தில் இறங்கி தீவிரமாக வேலை பார்த்துவருகிறார்.
அதே சமயம், அங்கு பெரும்பான்மையாக இருப்பவர்கள் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அதே சமுதாயத்தைச் சேர்ந்த வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், ஒன்றிய துணைச் செயலாளர் அறிவொளி சுப்பிரமணியம், வைரிச் செட்டிப்பாளையம் ஜெகநாதன் என முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வரிசை கட்டி வேலைப் பார்க்கிறார்கள். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மறைந்த முன்னாள் வனத்துறை அமைச்சரிடம் பதவிக்காகவும், பணத்திற்காகவும் ஒட்டிக்கொண்டிருந்த முக்கிய பொறுப்பாளர்கள் சிலர் தற்போது, அதே பதவிக்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் கே.என்.நேருவிடம் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள்.
அமைச்சரின் மகன் வேட்பாளர் என்பதால் வைட்டமின்கள் கரைபுரண்டு ஓடும் என்பதால் உடன் பிறப்புக்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்’’ என்றனர்.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை அப்பழுக்கற்ற அரசியல் வாதி என பெயரெடுத்த மறைந்த முன்னாள் வனத்துறை அமைச்சர் என்.செல்வராஜின் சகோதரர் மகன் என்.டி.சந்திரமோகனை எடப்பாடியார் டிக் அடித்து வைத்திருக்கிறாராம். காரணம், இவர்மீதும் எந்தவொரு குற்றச்சாட்டும் கிடையாது. கொரோனா காலக்கட்டத்தில் ஏராளமான உதவிகளை கட்சியினருக்கு செய்திருக்கிறார்.

இது பற்றி பெரம்பலூர் தொகுதியில் உள்ள மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம். எடுத்த எடுப்பிலேயே ‘‘சார், பெரம்பலூர் தொகுதியைப் பொறுத்தளவில் பெரும்பான்மை சமுதாயமான முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர்தான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கலந்தொட்டு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில், என்.டி.சந்திரமோகனை தவிர்த்து யாரை வேட்பாளராக அறிவித்தாலும் முத்தரையர் சமுதாயத்தில் உள்ள கோஷ்டி பூசல் மற்றும் உள்குத்து அரசியலில் தோற்கடிக்கப்படுவார்கள் என்பது உலகறிந்த விஷயம்.

அதனால்தான் எடப்பாடி பழனிசாமி என்.டி.சந்திரமோகனை தேர்வு செய்திருக்கிறார். இவர் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் பட்சத்தில் கோஷ்டி அரசியலை புறந்தள்ளிவிட்டு முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் வெற்றிக்காக பாடுபடுவார்கள் என்பதுதான் மூத்த ரத்தத்தின் ரத்தங்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது. இவரது சித்தப்பா என்.செல்வராஜ் அமைச்சராக இருந்தபோது, முத்தரையர் சமுதாயத்தை தாண்டி ரெட்டியார் உள்பட அனைத்து சமுதாயத்தினரையும் அரசியலைத் தாண்டி அரவனைத்துச் சென்றவர். எனவே, இவர் வேட்பாளராக களமிறங்கும் பட்சத்தில் இவரை எதிர்த்து யார் நின்றாலும் வெற்றி பெறுவது கடினம்’’ என்றனர்.

ஆக மொத்தத்தில், நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்காமல் இருக்கும் நிலையிலேயே, பெரம்பலூர் தொகுதில் தேர்தல் ஜுரம் அடிக்க ஆரம்பித்துவிட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal