வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தேனி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இதற்காக தற்போது சிட்டிங் எம்.பி.யாக இருக்கும் ரவீந்திரநாத் டி.டி.வி.க்காக விட்டுக்கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இப்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். மார்கழி மாதம் என்பதால் கூட்டணி பேச்சுவார்த்தை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடங்காமல் இருந்து வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு பிறகு கூட்டணி பேச்சுவார்த்தையை கட்சிகள் தொடங்க உள்ளன.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் பாஜக 3வது அணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. பாஜக தலைமையில் அமைக்கும் கூட்டணியில் டிடிவி.தினகரனின் அமமுக, ஓபிஎஸ், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் கிட்டத்தட்ட கூட்டணியில் இடம் பெறுவது உறுதியாவிட்டது.

மேலும் தேமுதிக மற்றும் பாமக மற்றும் சிறிய கட்சிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில், தேமுதிக பாஜகவுடன் இணையவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள டிடிவி.தினகரன் தேனி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்த தொகுதியில் எம்.பி.யாக உள்ள ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தனது சாதி ஒட்டுக்கள் அதிகமாக உள்ள சிவகங்கையில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்கு பாஜகவும் இசைவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal