அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராயப்பேட்டை தலைமைக்கழகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த கூடாது என்பதுடன் அ.தி.மு.க. கரை வேட்டியையும் கட்டக்கூடாது என்று ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை 2 நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ளது.
இந்த தடையை அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியோடு பார்க்கிறார்கள் அ.தி.மு.க.வுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் விளைவித்தவர் அவர். அடியாட்கள் மற்றும் குண்டர்களோடு சென்று தலைமைக்கழகத்தை அடித்து நொறுக்கி, கொள்ளையடித்துச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் கட்சி கொடியை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம். கோர்ட்டு மூலமாக கிடைத்த தண்டனையாகவே இதனை பார்க்கிறோம். குழம்பிய குட்டையில் ஓ.பி.எஸ். மீன்பிடிக்க நினைக்கிறார். அது பலிக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.