சேலம் ஓமலூரில் அ.தி.முக. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கே தேர்தலில் பேட்டியிட சீட் வழங்கப்படும். அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
சென்னையில் கனமழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. முதலமைச்சர், அமைச்சர்களும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காத வகையில் மழை நீர் வடிகால் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்கள். இதனை மக்களும் நம்பினார்கள். இந்த கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். உடமைகள் எல்லாம் பெரும் சேதத்திற்கு ஆளாகியது.
2, 3 நாட்கள் உணவு கிடைக்காமல் தவித்தனர். இப்படி நிலைமை இருக்க இந்த அரசாங்கம் முழுமையான வடிகால் வசதியை செய்து கொடுக்கவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையம் தென் மாவட்டங்களில் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என அறிவித்தது. இது பற்றி செய்தி வெளியிடப்பட்டது. அப்படி இருந்தும் தி.மு.க. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் அதிக கனமழை பெய்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.
அரசு வேகமாக துரிதமாக போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு என்ன என்ன தேவை என்பதை உணர்ந்து உடனுக்குடன் செயல்பட்டு இருந்தால் மக்களுடைய கோபத்திற்கு ஆளாகி இருக்க மாட்டார்கள். இதையும் இந்த அரசு செய்ய தவறி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.