உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. வருகிற 22-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. 16-ந்தேதியில் இருந்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற இருக்கிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள முக்கியமானவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ஆனால், மற்ற தலைவர்கள் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் பா.ஜனதாவின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி கலந்து கொள்வார் என விஸ்வ இந்து பரிசத் தெரிவித்துள்ளது. 96 வயதான அவர், வயது மூப்பு காரணமாக கலந்த கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. தற்போது கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டள்ளது.

இதுகுறித்து விஸ்வ இந்து பரிசத் தலைவர் அலோக் குமார் கூறுகையில் “கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதாக அத்வானி தெரிவித்தார். தேவைப்பட்டால் அவருக்கென
சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அதேவேளையில் முரளி மனோகர் ஜோஷி கலந்து கொள்ள முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளார்” என்றார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என 1980, 1990-களில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி தீவிரமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய், வயது மூப்பு காரணமாக இருவரும் அயோத்தி கும்பாபிஷேக விழாவில் இருவரும் கலந்த கொள்ள வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவர்கள் அதை ஏற்றுக் கொண்டனர்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal