வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கலாம்’ என்ற அஜெண்டாவை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது அ.தி.மு.க.வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது பற்றி மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம். ‘‘சார், மறைந்து முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது, யார் வேட்பாளர்கள் ஆவார் என்பதே தெரியா? ஆனால், அம்மா நிறுத்துபவர் எம்.பி. ஆகிவிடுவார். அப்பழுக்கற்ற நபரும், கீழ் மட்டத்தில் இருப்பவர்களும் ஒரே நாளில் உச்சத்திற்கு செல்வார்கள் என்பது நிதர்சனம்.

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஆனபிறகு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக பணம் செலவு செய்பவர்களுக்குத்தான் சீட் என முடிவு செய்திருக்கிறார். இதற்கு காரணம் ஆளுங்கட்சியான திமுகவையும், அசுர பலத்துடன் திகழும் அமைச்சர்களையும், இன்னொரு பக்கம் பாஜகவையும் களத்தில் எதிர்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு இது தான் வழி எனக் கருதுகிறார் அவர்.

இதற்காக தொகுதிவாரியாக யாரை வேட்பாளராக களமிறக்கலாம் என்ற தேடுதல் வேட்டையில் எடப்பாடி பழனிசாமியே நேரடியாக ஈடுபடத் தொடங்கியுள்ளார். மாவட்டச் செயலாளர்கள் கொடுத்த மூன்று பேர் அடங்கிய பட்டியல் ஒரு பக்கம் இருந்தாலும் திமுக வேட்பாளர்களையும், அமைச்சர்களையும் வீரியமாக எதிர்த்து களமாடக்கூடியவர்கள் யார் யார் என்ற டேட்டாவை தனிப்பட்ட முறையில் தனது சோர்ஸ்கள் மூலம் திரட்ட ஆரம்பித்துள்ளார்.

இதன் மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தல் செலவுக்கு கட்சியை பெரியளவில் நம்ப வேண்டாம் என்பது எடப்பாடி பழனிசாமி உணர்த்தும் மெசேஜாக உள்ளது. 40க்கு 40 தொகுதிகளையும் வெல்வோம் என அவர் பேசி வந்தாலும் குறைந்தது 10 முதல் 12 தொகுதிகளில் வென்றாலே போதும் என்ற டார்க்கெட்டுடன் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்துமாறு கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.

இதனிடையே பொங்கல் பண்டிகை முடிந்த ஒரு வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி பைனல் செய்ய இருக்கிறார்-. ஜெயலலிதா காலம் தொட்டே தேர்தல் என்று வந்துவிட்டாலே அதிமுக தான் முதல் ஆளாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும். அதேபோல் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் வகையில் முன் கூட்டியே வேட்பாளர் தேர்வு படலத்தில் கவனம் செலுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் 5 முதல் 6 சட்டமன்ற தொகுதிகள் வருவதாலும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டும் என்பதாலும் அதற்கேற்ப படித்த, பசையுள்ள, பயணம் செய்ய திடகாத்திரமுள்ள நபர்களை எடப்பாடி டிக் அடித்து வருகிறார்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal