தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகி உள்ளதாக சொல்லப்படுகிறது. தனித்த முறையில் வழக்கறிஞராக இயங்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல். தனது முடிவை முதல்வர் மற்றும் அரசு தலைமை அதிகாரிகளிடத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021-ல் திமுக ஆட்சி அமைத்தவுடன் அரசின் தலைமை வழக்கறிஞராக அவர் நியமிக்கப்பட்டார். 1977-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த சண்முகசுந்தரம், தன் தந்தையும் புகழ்பெற்ற வழக்கறிஞருமான எஸ்.ராஜகோபாலிடம் கிரிமினல் சட்டத்தில் பயிற்சி பெற்றார். சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராக, மாநில அரசு, சிபிஐ, ரயில்வே சார்பாக பல வழக்குகளில் வாதாடியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை குறித்து விசாரித்த எம்.சி.ஜெயின் விசாரணை ஆணையம் உட்பட பல விசாரணைகளுக்கு சண்முகசுந்தரம் அரசு சார்பாக வாதாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கில் அரசு தரப்பில் அவர் ஆஜராகி இருந்தார். 1996 முதல் 2001 வரையில் தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அவர் செயல்பட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அடுத்த தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்.