வருகிற நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தி.மு.க., அ.தி.மு.க. என இரு கட்சிகளும் கணக்குப் போட்டு வரும் நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணியில் ராஜ்ய சபா எம்.பி. ஆகப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இது பற்றி அறிவாலய வட்டாரத்திலும், ஆழ்வார்பேட்டை வட்டாரத்திலும் பேசினோம்.
‘‘சார், மக்கள் நீதிமய்யம் ஆரம்பித்த போது தி.மு.க., அ.தி.மு.க. என இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த வரும் வெளியான விக்ரம் படத்திற்குப் பிறகு உதயநிதியுடன் நெருக்கமானார் நடிகர் கமல்ஹாசன். கமலின் பிறந்தநாளுக்கு முதல்வர், உதயநிதி மற்றும் அமைச்சர்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாள் வாழ்த்தில், ‘‘கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி & மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நலம் சூழ வாழிய பல்லாண்டு!’’ என்று கூறியிருந்தார்.
அப்போது கமலிடம், அமைச்சர்களோடு பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பது திமுக கூட்டணிக்கு அட்சரமா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு கமலஹாசன், ‘‘எங்களை இங்கு ஒன்று சேர்த்தது கட்சி அல்ல. நல்லெண்ணம்’’ என்று கூறியிருக்கிறார்.
அதன் பிறகு இன்று வரை ஆளும் தி.மு.க.விற்கு இணக்கமாகவே கமல்ஹாசன் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் நடந்த கலைஞர் 100 விழாவில் மறைந்த முதல்வர் கலைஞருக்கு தனக்குமான நட்புறவை மீண்டும் நினைவுப்படுத்தினார் கமல்!
இந்த நிலையில்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தென் சென்னை அல்லது கோவை தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவதாக முதலில் தகவல்கள் வெளியானது. ஆனால், தி.மு.க. சார்பில் கமலை ராஜ்ய சபா எம்.பி. ஆக்கிவிடுவது என முடிவு செய்திருக்கிறாராம் முதல்வர் மு.க.ஸ்டாலின். கடந்த முறை இந்த வாய்ப்பு வைகோவிற்கு கிடைத்தது.
தவிர, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முன்பு போல சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியாததால், நடிகரை கமலை 40 தொகுதிகளுக்கும் பிரச்சார பீரங்கியாகவும் பயன்படுத்த தி.மு.க. தலைமை முடிவு செய்திருக்கிறது’’ என்றனர்!