தூத்துக்குடியில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயிக்கணக்கானோருக்கு நலத்திட்ட உதவிகளை வாரி வழங்கியிருக்கிறார் தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல்!
இது பற்றி தூத்துக்குடியில் உள்ள நடுநிலையான மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்.
‘‘சார், இளைஞரணி மாநாட்டிற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வராவது உறுதியாகிவிட்டது. இதனால் இளைரணியினரும் உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலையில்தால் கட்சிப் பணிகளில் இளைஞரணியினர் மாவட்டச் செயலாளர்களுக்கு இணையாக பணியாற்றி வருகின்றனர்.
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளைஞரணியினர் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என ஏற்கனவே அன்புக்கட்டளை இட்டிருந்தார் உதயநிதி ஸ்டாலின். தூத்துக்குடியில் சாலைகள், பாலங்கள், குடிநீர், மின்சார கட்டமைப்புகள் கடும் சேதமடைந்தன. வீடுகள், கடைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் உள்ளே இருக்கவும் முடியாமல் வெளியேசெல்லவும் முடியாமல் மக்கள் பரிதவித்தனர். இதனையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு அதிகாரிகள் மீட்புபணிகளில் இறங்கினர். திமுக மாநில இளைஞரணி துணைசெயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் தலைமையில் நூற்றுக்கணக்கான திமுகவினரும் தங்கள் பங்குக்கு மழையால் பாதித்த மக்களை மீட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைத்தனர். (தனது தாயார் மறைந்த துக்கத்தில் இருந்து மீளாத நிலையிலேயே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இறங்கினார் ஜோயல்).
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21 ஆம் தேதி தூத்துக்குடியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ரூ.6,000 நிவாரண உதவி வழங்கினார். இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேருதவியாக அமைந்தது.
இந்தபேரிடர் காலத்தில் தங்களையாருமே கண்டுகொள்ளவே இல்லை என ஆட்டோ டிரைவர்கள் ஆதங்கப்பட்டனர். ஆட்டோ டிரைவர்களின் ஆதங்கத்தை அறிந்த திமுக மாநில இளைஞரணி துணைசெயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் உடனடியாக தூத்துக்குடி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் தலைமை நற்பணி மன்றம் சார்பில் ஆட்டோ நிறுத்தங்களுக்கு தேடி சென்று இந்த பொங்கல் திருநாளை மனமகிழ்வோடு கொண்டாட அழைப்பு விடுத்தார். அதன்படி, ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் நேற்று ஜனவரி 9 ஆம் தேதி தூத்துக்குடி வாட்டர் டேங்க் எதிரில் உள்ள ‘கணிபேலஸ்’திருமண மண்டபத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
அப்போது ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை, மளிகை பொருட்கள், போர்வைகள் என தரமான பொருட்கள் அடங்கிய 1750 ரூபாய் மதிப்பிலான நிவாரணத்தை சுமார் 1300க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களுக்கு திமுக மாநில இளைஞரணிதுணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் வழங்கினார். தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த போதிலும் நிவாரணம் தரமாக இருந்தபடியால் நனைந்த படியே மகிழ்வுடன் வாங்கிச்சென்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள்’’ என்றவர்கள், அடுத்து தூத்துக்குடியில் நடக்கும் அரசியலை புட்டு புட்டு வைத்தனவர்.
அதாவது, ‘‘தூத்துக்குடியில் இரண்டு அமைச்சர்கள் இருப்பது வெறும் பெயரளவில்தான். ஒரு அமைச்சர் மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டியவர், அவரே தனது வீட்டில் மூன்று நாட்கள் முடங்கிக் கிடந்து அதன் பிறகு வெளியே வந்தார். இவர் எந்தளவிற்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதார் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
இன்னொரு அமைச்சருடைய தம்பி தூத்துக்குடி மாநாகராட்சி மேயராக இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ‘கமிஷன்’ பிரிப்பதிலேயே ‘பஞ்சாயத்து’ நீடித்துக்கொண்டிருக்கிறது. தூத்துக்குடியில் இரண்டு அமைச்சர்கள் மீதும் மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக உளவுத்துறையே தலைமைக்கு ‘நோட்’ போட்டு கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில்தான், தி.மு.க. இளைஞரணி மாநிலச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதியின் கண் அசைவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வாரிக் கொடுத்திருக்கிறார் இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி ஜோயல். அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் அகமகிழ்வோடு நலத்திட்ட உதவிகளை வாங்கிச் சென்றனர்’’ என்று தூத்துக்குடி அரசியலை போட்டுடைத்தனர்!