கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை பிப்ரவரி 9-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி (எ) பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. கோவை சிபிசிஐடி கூடுதல்துணை ஆணையர் முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கு விசாரணைநீலகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி தரப்பில் வழக்கறிஞர் ஷாஜகான், கூடுதல் துணை ஆணையர் முருகவேல் உள்ளிட்டோர் ஆஜராகினர். குற்றம்சாட்டப்பட்ட வாளையாறு மனோஜ், சயான், உதயகுமார் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் 8 செல்போன் உரையாடல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 8,000பக்கம் கொண்ட அறிக்கையைப் படிக்கவும், மேலும் பலரிடம் விசாரணை நடத்தவும் காலஅவகாசம் தேவைப்படுகிறது. எனவே, கூடுதல் அவகாசம் தருமாறு சிபிசிஐடி போலீஸார் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கை வரும் பிப்ரவரி 9-ம் தேதிக்கு தள்ளிவைத்து மாவட்ட நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார்.