தமிழக அரசியல் களத்தில் திராவிட கட்சிகளுக்கு (தி.மு.க. & அ.தி.மு.க.) மாற்றாக ஒரு இயக்கத்தை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கையில், சரியான சமயத்தில் களத்தில் இறங்கியிருக்கிறார் நடிகர் விஜய்.

சமீபகாலமாக நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலமாக நலத்திட்டப் பணிகள் செய்து வருகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் களத்தில் இறங்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கையில், தி.மு.க. துணைப் பொதுப்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழிக்கு நேற்று நடிகர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துக் கூறியிருப்பதுதான் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை நேற்று மாலை தொலைபேசி மூலம் அழைத்து பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய நடிகர் விஜய் 5 நிமிடங்கள் வரை உரையாடியிருக்கிறார்.

அப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி ஆற்றிய நிவாரண களப்பணிகளை குறிப்பிட்டு பேசிய நடிகர் விஜய், இதற்காக தனிப்பட்ட முறையில் பாராட்டியிருக்கிறார். இதன் மூலம் சினிமா ஷூட்டிங், வெளிநாடு என பிசியாக இருந்தாலும் தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும், அரசியல் கட்சி பிரமுகர்களின் செயல்பாடுகளையும் நடிகர் விஜய் கூர்ந்து கவனித்து வருகிறார் என்பது தெரியவருகிறது.

தனக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வார் என்பதை சற்றும் எதிர்பார்க்காத கனிமொழி, அண்மையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அவர் நிவாரணப் பொருட்கள் வழங்கியதை சுட்டிக்காட்டி நன்றியும், பாராட்டும் தெரிவித்திருக்கிறார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தான் தனது பிறந்தநாள் விழாவையே இந்தாண்டு ரத்து செய்ததையும் கூறியிருக்கிறார்.

திமுகவில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலரும் கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூட சொல்லாத நிலையில் நடிகர் விஜய் அழைத்து வாழ்த்துச் சொல்லியிருப்பது அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனிமொழியை போல் திமுகவில் உள்ள மற்ற எந்த எம்.பி.யும் கை கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

நடிகர் விஜயை பொறுத்தவரை பண்பட்ட அரசியல் நாகரீகத்தோடு அரசியல் கட்சித் தலைவர்களை அணுக ஆரம்பித்துள்ளார். கனிமொழியை தொலைபேசி மூலம் அழைத்து வாழ்த்துச் சொன்னதை போலவே டிடிவி தினகரன், நல்லகண்ணு, உள்ளிட்ட பலருக்கும் கடந்த காலங்களில் நேரடியாக தொலைபேசியில் பேசி பிறந்தநாள் வாழ்த்துக் கூறியிருக்கிறார்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்துவிடுவார் என ஆருடங்கள் கூறப்படும் நிலையில் அதையொட்டியே விஜயின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. தி.மு.க.வைப் பொறுத்தளவில் கனிமொழி எம்.பி.யும் அரசியல் நாகரீகத்தோடு அனைவரையும் அணுகக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal