இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட தி.மு.க. இளைஞரணி மாநாடு வருகிற ஜனவரி 21ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அந்த அணியை இன்னும் அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், டிசம்பர் 17-ம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவிலான திடல் தயாராகி வருகிறது.

இந்த மாநாட்டை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக வாகன பேரணிகளை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்ப சந்தித்துள்ளன. இந்த நிலையில், அங்கு நிவாரணப் பணிகளில் அமைச்சர்கள் உள்ளிட்ட திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு பகலாக மீட்புப்பணிகளில் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வரும் 17-ம் தேதி நடைபெற இருந்த இளைஞரணி மாநாடு தேதி மாற்றம் செய்யப்படுவதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’மிக்ஜாம் புயலால் பெய்த பெருமழை – வெள்ளம் காரணமாக, சில மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி, மழை – வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால்,17, -12-2023 அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு தேதி மாற்றப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக 24- நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு தென்மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் மழை பெய்ததால், மீண்டும் இரண்டாவது முறையாக இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் வருகிற ஜனவரி 21ம் தேதி தி.மு.க. இளைஞரணி மாநாடு நடைபெறும் என தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal