தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்த தொகுதிகளை தி.மு.க. ஒதுக்க முன்வராததால், வாரிசுகளுக்கு ‘சீட்’ வாங்க தலைவர்களே முட்டி மோதுவதால், சத்திய மூர்த்தி பவனில் பனியிலும் அனல் காற்று வீசுகிறது.

இது பற்றி மூத்த கதர்களிடம் பேசினோம். ‘‘சார், லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. பாஜகவுக்கு எதிரான “இந்தியா” கூட்டணியில் பல மாநிலங்களில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஜரூராக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் “இந்தியா” கூட்டணிக்கு திமுக தலைமை வகிக்கிறது. இந்தக் கூட்டணியில் தற்போது காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, தவாக உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் இதே கூட்டணிதான் தமிழ்நாட்டில் இருந்தது. அத்தேர்தலில் திமுக 20 இடங்களில் போட்டியிட்டு 20 தொகுதிகளையும் கைப்பற்றியது. காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டு 8, இடதுசாரிகள் 4 தொகுதிகளில் போட்டியிட்டு 4, விசிக 2-ல் போட்டியிட்டு 2, முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை தலா 1 இடத்தில் போட்டியிட்டு 1-ல் வென்றன. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38-ல் திமுக கூட்டணி வென்றது. திமுக கூட்டணி 2,27,89,020 வாக்குகளை அள்ளியது. புதுச்சேரி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

தற்போதைய நிலையில் இதே கூட்டணி அமைந்தால் இதே பார்முலாவில் தொகுதி பங்கீடு இருக்கும் என்பதுதான் கூட்டணி கட்சிகளுக்கு திமுக தந்த முதல் மெசேஜ். இதனால் திமுக கூட்டணியில் 15 தொகுதிகளைக் கேட்டு 10 தொகுதிகளைப் பெற்றுவிட முடியும் என நினைத்து கொண்டிருந்தது காங்கிரஸ். டெல்லியில் அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திலும் ‘மேலிடமும்’ இதனையே வலியுறுத்தி இருந்ததாகவும் கூறப்பட்டது.

அதேநேரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திடீரென முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அத்துடன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனும் திமுகவுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸே முதல்வர் ஸ்டாலினை தேடி வந்து சந்தித்தன் மூலம், திமுக கூட்டணியில் பாமக இடம் பெறுவது உறுதியாகி இருக்கிறது.

இதனால் திமுக முன்வைத்த உத்தேச தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ், இடதுசாரிகளுக்கான இடங்களைக் குறைத்து அந்த இடங்களை பாமகவுக்கு ஒதுக்கவும் திமுக தலைமை முடிவு செய்துள்ளது. அதாவது காங்கிரஸுக்கு தமிழ்நாடு, புதுவையில் 9+1 10 இடங்கள் தர முடிவு செய்திருந்த திமுக தற்போது 5 என குறைத்துள்ளது. அதே போல இடதுசாரிகளுக்கு 4 இடங்கள் என உறுதி அளித்திருந்த திமுக தற்போது 3 ஆக குறைத்துள்ளதாம். விசிகவிற்கு ஒரு தொகுதியை கொடுக்க திமுக முடிவு செய்துள்ளதாம். இதனடிப்படையில் பாமகவுக்கு 6 அல்லது 7 தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை திட்டமிட்டிருக்கிறது. திமுக போட்டியிட திட்டமிட்டிருந்த 22 தொகுதிகளில் 1 தொகுதியை நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கும் தர முடிவு செய்திருக்கிறது.

இந்த முடிவுகளைத் தொடர்ந்து சென்னையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தை திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டிஆர் பாலு நேற்று சந்தித்து பேசினார். அப்போது திமுகவின் முந்தைய உத்தேச தொகுதி பங்கீடு, ராமதாஸ்- கமல்ஹாசன் வருகையைத் தொடர்ந்து தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படும் சூழல் ஆகியவை குறித்து சிதம்பரத்திடம் டிஆர் பாலு விரிவாக விவரித்தாராம். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தேர்தலில் வெல்ல வேண்டும் என்றால் திமுக கூட்டணியில் நீடித்தாக வேண்டும். வெற்றியோ தோல்வியோ அதிக தொகுதிகளில்தான் வேண்டும் என அடம்பிடித்தால் இருக்கவே இருக்கிறது அதிமுக கூட்டணி என்பதையும் மேலோட்டமாகவும் மறைமுகமாகவும் காங்கிரஸுக்கு திமுக தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது’’ என்றனர்.

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும் காங்கிரஸின் நிலை ‘அந்தரத்தில்’தான் உள்ளது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal