பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இன்று (செவ்வாய்க் கிழமை) தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தூய்மைப் பணிகளை மேற்கொண்டார். அப்போது அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பிரதமருக்கு பிடித்த தூய்மை இந்தியா திட்டத்தை திருச்சிக்கு பிரதமர் வரும் நேரத்தில் இன்றைய நாளில் 75 இடங்களில் பாஜகவைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள், இளைஞர் அணி தலைவர், தொண்டர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளோம்.

தமிழகத்தில் குப்பைகள் அதிகளவு சேர்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசு குப்பைகளை அகற்றி மீண்டும் உரமாக மாற்றி பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும். அத்தகைய திட்டங்கள் இல்லாததால் அதிகமான குப்பை கிடங்குகள் தான் உருவாகிக் கொண்டிருக்கின்றன. சில இடங்களில் குப்பைகளை அகற்றாததால் சாலையில் துர்நாற்றம் வீசும் அளவுக்கு உள்ளது. குப்பை அகற்றம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த சுத்தம் செய்யும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் இன்று திருச்சிக்கு வரும்போது முக்கிய தலைவர்கள் அவருக்கு வரவேற்பு அளிக்கின்றனர். அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு அளிக்க இருப்பது தெரியவந்தது. பிரதமரை வரவேற்க முக்கியத் தலைவர்கள் விரும்பினால் அவர்கள் வரவேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

மிக முக்கியமாக இரண்டு பெரு வெள்ளங்கள் வந்தும் தமிழக அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருமழை பெய்யும் என முன்னெச்சரிக்கை கொடுத்தும் தமிழ்நாடு அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் ஜீரோ சதவீதம் பணியில் ஈடுபடாமல் இருந்தார்கள். இது தமிழக அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal