இஸ்ரோ பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி, செயற்கைக்கோள்களை புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, செயற்கைக்கோள்களை புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது மகிழ்ச்சிக்குரியது. பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் பொருத்தப்பட்ட ‘எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைக்கோளானது வானியலின் இயக்கம், விண்வெளியில் காணப்படும் நிறமாலை, துாசு, செயலில் உள்ள விண்மீன் கருக்கள், மேகக்கூட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும்.
மேலும் இந்த ராக்கெட்டின் மூலம் செலுத்தப்பட்ட ‘வெசாட்’ என்ற செயற்கைக்கோளும் காலநிலைப் பற்றி ஆய்வு செய்கிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த 10 செயற்கைக்கோள்களையும் சுமந்து சென்று வெற்றி அடைந்திருக்கிறது. குறிப்பாக இஸ்ரோ விண்வெளித்துறையில் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வருகிறது. நிலவின் தென்துருவத்தில் கால் பதித்து உலகையே திரும்பி பார்க்க வைத்த நாடு இந்திய நாடு. இந்த பெருமையை நிலைநாட்டியது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம். விஞ்ஞானிகளின் கடின உழைப்பும், அவர்களுக்கு துணையாக பணியாற்றியவர்களின் ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியது.
அந்த வகையில் 2024 புத்தாண்டின் முதல் நாளிலேயே பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தியது இஸ்ரோ விஞ்ஞானிகளின் வெற்றியில் மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது. பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, நிலைநிறுத்தி புத்தாண்டை வெற்றிகரமாக தொடங்கி இந்திய மக்களை, இந்திய நாட்டை உலகமே உற்றுநோக்கும் வகையில் செய்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டி, புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இஸ்ரோ விஞ்ஞானிகளின் வெற்றிப்பயணம் மென்மேலும் தொடர, சிறக்க, வளர த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன்.