ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சென்னை கடற்கரை, மாமல்லபுரம் உள்பட தமிழக முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களிலும் பல கோவில்களிலும் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை கடற்கரை, மாமல்லபுரம், சேலம் ஏற்காடு உள்பட தமிழக சுற்றுலா தலங்களில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் உள்ள கோவில்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி பல கோவில்களில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், சென்னை தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு சொந்தமான பெருமாள் கோவில், வடபழனி முருகன் கோவில் , பூங்காநகர் ராசப்பா தெருவில் கந்தகோட்டம் முருகன் கோவில் , திருவொற்றியூர் தேரடியில் அமைந்துள்ள வடிவுடையம்மன் கோவில் , திருமுல்லைவாயலில் உள்ள பச்சையம்மன் மன்னாதி ஈஸ்வரர் ஆலயம் , பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோவில் , திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் , மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் , பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் ஆகிய பல கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் நேற்று காலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். நேற்று 2023ம் ஆண்டின் கடைசி சூரிய உதயம் மற்றும் மாலையில் கடைசி சூரிய அஸ்தமன காட்சிகளை கண்டு ரசித்தனர். இதையடுத்து இரவு நேரம் செல்ல செல்ல பல இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் குடும்பம் குடும்பமாக வர தொடங்கினர். புத்தாண்டு விடுமுறை என தொடர் விடுமுறை வந்த நிலையில் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகளால் ஊட்டியில் உள்ள காட்டேஜ்கள், லாட்ஜ் மற்றும் ரிசார்ட்டுக்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. நேற்று ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், சூட்டிங் மட்டம், பைக்காரா படகு இல்லம் போன்ற பகுதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இங்கு புத்தாண்டை கொண்டாட பிற மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நேற்று குவிந்தனர். 


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal