முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திடீரென சந்தித்து பேசியது, அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது. 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் தாண்டி கூட்டணிக்கு அச்சாரம் அமைக்கும் வகையிலேயே இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்.
வெள்ளப் பெருக்கு, மின் கட்டண உயர்வு என மக்களின் எதிர்பார்ப்புகளை தி.மு.க. இழந்துவிட்டதாகவும் அ.தி.மு.க.வுக்குள் எழுந்த மோதல்களால் ஏற்பட்ட அதிருப்தியும் இரு கட்சிக்காரர்களின் ஆதரவும் பா.ம.க.வுக்கு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். எனவே இரு கட்சிகளுக்கும் பிடிகொடுக்காமல் இருக்கும் பா.ம.க. கட்சிகளின் நிலையை அறிவதற்காகவே இந்த சந்திப்பை நடத்தியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பா.ம.க.வுடன் அமைச்சர் துரைமுருகன் ரகசிய பேச்சு நடத்தியதாக கூறப்பட்டது.
வட மாவட்டங்களை பொறுத்த வரை விடுதலைச் சிறுத்தைகளின் ஆதரவு போதும் என்றாலும் தற்போதைய நிலையில் பா.ம.க.வும் கூட்டணியில் இணைந்தால் பலம் கூடும் என்ற எண்ணம் தி.மு.க. தரப்பிலும் இருக்கிறது. அதே நேரம் பா.ம.க. இடம் பெறும் அணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கூறி வருவதால் அதையும் சமாளிக்க வேண்டும் என்று தி.மு.க. யோசிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகளை சமாளித்து பா.ம.க.வை இணைத்தாலும் தொகுதிகளை பங்கிடுவதில் பிரச்சினை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
ஆனாலும் வெற்றி பெறும் கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு. அந்த வகையில் தி.மு.க. கூட்டணியையே அது எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே டாக்டர் ராமதாஸ் நேரில் சந்தித்து இதுவரை எந்த கூட்டணி என்று முடிவு செய்யவில்லை என்பதை சூசகமாக தெரிவித்து வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்த மாதத்தில் இருந்து கூட்டணி பேச்சு வார்த்தைகள் தீவிரமாகும்.
அப்போது பா.ம.க.-தி.மு.க. கூட்டணி ஏற்பட வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. பா.ம.க.வின் வாக்கு வங்கியை பயன்படுத்திக் கொண்டால் தற்போதைய சூழலில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதாவை எதிர்க்க உதவும் என்ற கருத்தும் தி.மு.க.வில் சில தலைவர்களிடம் இருக்கிறது. அதே போல் இந்த தேர்தலில் சீட் அதிகமாக கேட்டு தி.மு.க.விடம் பேரம் பேச முடியாது. இருந்தாலும் கூட்டணி விஷயத்தில் விட்டுக் கொடுக்கும் மன நிலையில் பா.ம.க. இருப்பதாகவும் கூறப்படுகிறது.