‘‘கேப்டன் விஜயகாந்த் பேச்சு வராமல் முடங்கிப்போனதற்கு அவருக்கு ‘செய்வினை’ வைக்கப்பட்டது தான் காரணம்’’ என கங்கை அமரன் பேசி இருக்கிறார்.

கோலிவுட்டின் கருப்பு எம்ஜிஆர் என அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். இவரின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்கள் கண்ணீர்மல்க காத்திருக்கும் காட்சிகள் நெஞ்சை ரணமாக்குகின்றன. அதுமட்டுமின்றி விஜயகாந்துடன் சினிமாவின் பணியாற்றிய பிரபலங்கள் பலர் அவரைப்பற்றி பல்வேறு தகவல்களையும் தெரிவித்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் விஜயகாந்தை வைத்து படம் இயக்கியவரும், அவரது படங்களுக்கு இசையமைத்தவருமான கங்கை அமரன், கேப்டன் பற்றி சில அதிர்ச்சி தகவல்களை கூறி இருக்கிறார். தொலைபேசி வாயிலாக ஊடகம் ஒன்றிற்கு பேசிய அவர், ‘‘அமெரிக்கா உள்பட உலகின் தலைசிறந்த நாடுகளில் விஜயகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் பழைய நிலைக்கு திரும்பமுடியாமல் போனது ஏமாற்றத்தை அளித்தது.

ஒருவேளை ஆன்மீகத்தின் மூலம் விஜயகாந்துக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை சரிசெய்திருக்கலாமோ என யோசிக்கத் தோன்றுகிறது. அவருக்கு இது இறக்கும் வயதே இல்லை. இன்னும் எவ்வளவோ காலம் இருந்திருக்க வேண்டிய மனிதர் அவர், இவ்வளவு சீக்கிரம் இறந்துவிட்டார் என நினைக்கும்போது மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

நானும் என் அண்ணன் இளையராஜாவும் தான் விஜயகாந்த் படங்களுக்கு அதிகளவில் இசையமைத்துள்ளோம். நான் அவரை வைத்து 2 படங்களையும் இயக்கி உள்ளேன். கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்தை தன்னால் பார்க்கமுடியவில்லை. பார்த்திருந்தால் ஆன்மீகத்தின் மூலம் அவரை குணப்படுத்த அறிவுறுத்தியிருப்பேன். அவருக்கு பேச்சு வராமல் போனதற்கும் கை, கால்கள் செயலிழந்து போனதற்கும் செய்வினை தான் காரணமாக இருக்கும் போல தெரிகிறது’’ என கங்கை அமரன் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal