விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் அரசியலில் பெரிய சக்தியாக இருந்திருப்பார் என்றும் அவரின் இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம் எனவும் ரஜினி கூறி இருக்கிறார்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவு சினிமா மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் திரையுலகினரும், அரசியல் தலைவர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் விஜய் சேதுபதி, விஜய், கவுண்டமணி உள்பட ஏராளமானோர் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து இன்று காலை விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலத்தில் இருந்து சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

விஜயகாந்த் உடல் இன்று பிற்பகல் 1.30 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அதன்பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி அளித்த ரஜினிகாந்த், தன் அருமை நண்பர் விஜயகாந்தின் மறைவு குறித்து உருக்கமாக பேசி இருக்கிறார்.

அவர் கூறியதாவது : “அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. விஜயகாந்த், அசாத்தியமான மன உறுதி உள்ள மனிதர். எப்படியாச்சும் உடல்நிலை தேறி வந்துவிடுவார்னு எல்லாரும் நினைச்சோம். சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக்குழுவில் அவரை பார்க்கும்போது, எனக்கு நம்பிக்கை கம்மி ஆயிடுச்சு. அவர் நல்ல ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். தமிழ் மக்களுக்கு நிறைய நல்லது பண்ணி இருப்பார். அந்த பாக்கியத்தை தமிழ் மக்கள் இழந்திருக்கிறோம்” என ரஜினிகாந்த் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal