வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. வெற்றி பெறும் என புதிய கருத்துக் கணிப்பில் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி எனும் பெயரில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இந்த கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் உள்ளன. இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, எதிர்வரவுள்ள 2024 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டுய்ம் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

2024 தேர்தலில் வெற்றிவாய்ப்பு யாருக்கு உள்ளது என்பதை அறிய ஏபிபி – சி வோட்டர் நிறுவனங்கள் இணைந்து 18 வயது பூர்த்தியடைந்த வாக்குரிமை பெற்றவர்களிடம் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி முதல் டிசம்பர் 21 ஆம் தேதி வரை கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சுமார் 295-&335 இடங்களைப் பெறும் எனவும், காங்கிரசை உள்ளடக்கிய எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி, சுமார் 165-&205 இடங்களைப் பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தென் மாநிலங்கள் தவிர, பீகார், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இந்தியா கூட்டணி சிறப்பாக செயல்படும் எனவும், அம்மாநிலங்களில் பாஜக சிக்கலை சந்திக்கும் எனவும் ஏபிபி – சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. 2024 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றாலும் எப்போதும் போல் தெற்கு அக்கூட்டணிக்கு சவால் மிக்கதாகவே இருக்கும் எனவும் ஏபிபி, – சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

மண்டல வாரியான கணிப்புகளின்படி, கிழக்கு மண்டலத்தில் உள்ள 153 இடங்களில் 80&-90 இடங்களையும், வடக்கு மண்டலத்தில் உள்ள 180 இடங்களில் 150&-160 இடங்களையும், மேற்கு மண்டலத்தில் உள்ள 78 இடங்களில் 45&-55 இடங்களையும், தென் மண்டலத்தில் உள்ள 132 இடங்களில் 20-&30 இடங்களையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணியானது தென் மண்டலத்தில் மட்டும் 70&-80 இடங்களை வெல்லும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மூன்று மண்டலங்களில், கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கில் முறையே 50-&60, 20&-30, மற்றும் 25-&35 இடங்களை மட்டுமே கைப்பற்றும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்தியப் பிரதேசம் (27&-29), உத்தரப் பிரதேசம் (73-&75), சத்தீஸ்கர் (9-&11), ராஜஸ்தான் (23-&25) போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் அக்கட்சி வசதியாக வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் பாஜக 52 சதவீத வாக்குகளுடன் 22-&24 இடங்களை கைப்பற்றும் எனவும், காங்கிரஸ் 4-6 இடங்களை கைப்பற்றும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் இந்தியா கூட்டணிக்கு தலா 0-2 இடங்கள் மட்டுமே கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்பின்படி, தெலங்கானா (9-&11 இடங்கள்), பீகார் (21&-23), மகாராஷ்டிரா (26-&28) ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான இந்திய அணி முன்னிலையில் உள்ளது. பஞ்சாபில், காங்கிரஸ் 5-&7 மக்களவைத் தொகுதிகளையும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 4-&6 இடங்களையும் கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில், ஆளும் திரிணாமூமுல் காங்கிரஸ் 23-&25 இடங்களையும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து 0-2 இடங்களையும், பாஜக 16&-18 இடங்களையும் பெறும் என ஏபிபி – சி வோட்டர் கருத்துக்கணிப்பு கணித்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal