கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று காலை முதல் கன்னட அமைப்பினர் இணைந்து கன்னட மொழியில் எழுதப்படாத விளம்பரப் பலகைகளை அடித்து உடைத்து
போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பிற மொழிகளில் உள்ள விளம்பரப் பலகைகளை உடைத்தனர்.
ஏற்கனவே கர்நாடகாவில் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அங்குள்ள பல்வேறு கன்னட அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று அவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைதுசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.