‘‘மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், ஓ.பன்னீர்செல்வம் தன்னிடம் உள்ள ரகசியம் என்ன என்பதை வெளிப்படையாக கூற வேண்டும்” என அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி தெரிவித்தார்.

இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ‘‘தென் மாவட்டங்களில் கடந்த 17-ம் தேதி அதிகனமழை பெய்யும் என கடந்த 14-ம் தேதியே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், அங்கும் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் அசம்பாவிதங்களை தவிர்த்திருக்கலாம்.

தமிழக முதல்வர், மத்திய அரசு நிதி அளிக்க வேண்டும் என்றுதான் கேட்டுக்கொண்டிருக்கிறார். மத்திய அரசு நிதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் மாநில அரசின் நிதியில் இருந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களை மீட்டெடுப்பதுதான் ஒரு நல்ல அரசின் கடமை. ஆனால், மாநில அரசானது, வேண்டுமென்றே மத்திய அரசு மீது குறைசொல்லிக் கொண்டும், மத்திய அரசானது, தமிழக அரசு மீது குறை சொல்லிக்கொண்டும் இருப்பது கவலை அளிக்கிறது. மத்திய அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது. மத்திய அரசானது பேரிடர் காலங்களில் உடனடியாக தேவையான நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.

அந்தந்த அரசியல் சூழலுக்கு தகுந்தவாறு கட்சிகள் கூட்டணி அமைக்கும். அதுபோல பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தோம். தற்போது வெளியேறிவிட்டோம். சிறுபான்மையினரின் வாக்குகளை ஏமாற்றி திமுக பெற்று வந்தது. அதற்கு நாஙகள் முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம். அதை தாங்க முடியாத காரணத்தால் பிதற்றிக் கொண்டிருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

திஹார் சிறைக்கு செல்ல ஓ.பன்னீர்செல்வம் தயாராகிவிட்டார். அவர் மீதான வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதில், அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். தன் குடும்பத்தினர் மீது நிறைய சொத்து வாங்கி வைத்துள்ளார் ஓபிஎஸ். நான் முதல்வராக இருந்துள்ளேன். எனக்கு அனைத்துமே தெரியும். என் மீது பழியை சுமத்தி அவர் தப்பிக்க பார்க்கிறார். ஆனால், தப்பிக்க முடியாது. சட்டப்பேரவையில் முன்வரிசையில் இருக்கும் திமுக அமைச்சர்கள் பலருக்கும் தண்டனை காத்துக்கொண்டிருக்கிறது.

நாங்களெல்லாம் கட்சியில் தொடக்கத்தில் இருந்தே இருக்கிறோம். ஓபிஎஸ் இடையில் வந்தவர். அவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.2 கோடி கடன் அளித்ததாக சொல்கிறார். எவ்வளவு மோசமான வார்த்தை அது. ஓபிஎஸ் தரப்பினர் திமுகவின் பி டீம். ஓபிஎஸ் தன்னிடம் உள்ள ரகசியம் என்ன என்பதை வெளிப்படையாக கூற வேண்டும். மக்கள் தெரிந்துகொள்ளட்டும்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஆட்சியில் இருந்தபோது நடந்த தவறுகளை நான் வெளிப்படுத்தினால் திஹார் சிறைக்குதான் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி செல்ல வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal