பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை நடப்புக் காலாண்டிற்கு வழங்கப்படவில்லை.
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்காக, தமிழக அரசின் அனைத்துத் திட்ட பயனாளிகளுக்கும் வழங்கப்படும் உதவிகள் மறு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், மகளிர் உரிமைத் தொகை பெறும் குடும்பங்களைச் சேர்ந்த படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட இருப்பதாகவும் வேலைவாய்ப்பு அதிகாரிகள் கூறியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.
இத்திட்டத்திற்கான நிபந்தனைகளை தளர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அத்துடன் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தோருக்கு ரூ.1,000, தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.2,000, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.3,000, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.4,000, பட்டமேற்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.5,000 வீதம் உதவித்தொகையை உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.