காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் நேற்று ரவுடி பிரபாகரன் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (37). பிரபல ரவுடியான இவர் மீது காஞ்சிபுரம், விஷ்ணு காஞ்சி காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நேற்று பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரபாகரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

இந்நிலையில், இந்த கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ரகு மற்றும் அசேன் ஆகியோர் ரயில் நிலையம் அருகே பதுக்கி இருந்ததை அடுத்து போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது இருவரும் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் போலீசாரை வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சித்தனர்.

இதனையடுத்து உதவி ஆய்வாளர் சுதாகர் துப்பாக்கியால் சுட்டதில் ரகு மற்றும் அசேன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 2 போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரத்தில் காலையில் இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal