தமிழக சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் வழக்கமாக தொடங்கும். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி மதம் 7,8ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளதால் ஜனவரி 2வது வாரத்தில் கூட்டத்தொடரை தொடங்கலாமா அல்லது பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடங்கலாமா என ஆலோசனைசெய்யப்பட்டு வருகிறது.
ஆளுநரின் உரையில் அரசின் நிதிநிலை, புதிய திட்டங்கள், அரசின் கொள்கைகள் குறித்த அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் கடந்த ஆண்டு அரசு கொண்டு வந்த முக்கிய திட்டங்கள் குறித்தும் ஆளுநர் தனது உரையில் தெரிவிப்பார். தற்போதுள்ள சூழலில், மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பு வழங்கப்பட வேண்டியுள்ளது. இதற்கான ஆலோசனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி கடைசி வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கியது. அன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது அரசு தயாரித்து வழங்கிய உரையில் சில பகுதிகளை நீக்கியும், சில பகுதிகளை சேர்த்தும் ஆளுநர் வாசித்தார். தொடர்ந்து, ஆளுநரின் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் மு.அப்பாவு வாசித்தார். அந்த சூழலில், அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையடுத்து, பேரவைத் தலைவர் அப்பாவு, தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்காத நிலையில், அரசு அளித்த உரை மட்டும் அவைக்குறிப்பில் இடம்பெறும் என்றும் ஆளுநர் சொந்தமாக சேர்த்து படித்தவை அவைக்குறிப்பில் இடம்பெறாது என்றும் தெரிவித்தார். இதனையடுத்து ஆளுநருக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து பேசிக் கொண்டிருக்கும்போதே, ஆளுநர் ரவி அவையில் இருந்து வெளியேறினார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளியேறியதாக தமிழக அரசு கண்டனம் தெரிவித்தது.
கடந்த ஓராண்டு காலமாகவே பல்வேறு விஷயங்களில் ஆளுநர் மற்றும் தமிழக அரசு இடையில் பனிப்போர் நிலவி வருகிறது. இதனையடுத்து ஆண்டு முதல் கூட்டத்தை ஆளுநரை அழைத்து நடத்தலாமா அல்லது அவரை அழைக்காமலேயே கூட்டத்தொடரை நடத்தலாமா என்பது குறித்த ஆலோசனையும் நடைபெற்று வருவதாக தலைமை செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.