தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால், அனைத்துப் பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தப் பகுதிகளில் தமிழக அரசு வெள்ள நிவராண பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், ‘கலைஞரின் மகள் கனிமொழியா இவ்வளவு எளிமையாக…..’ என அனைவரும் ஆச்சர்யப்படுமளவு களத்தில் இறங்கி கடுமையாக வேலை பார்த்து வருகிறார் கனிமொழி எம்.பி.!

இது பற்றி தி.மு.க.வின் மூத்த உடன் பிறப்புக்களிடம் பேசினோம். ‘‘சார் கடந்த 18ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த கனிமொழி, அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடிக்குச் சென்றார். தனது இல்லத்திற்குக்கூட செல்லாமல் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களைத் தேடி இருசக்கர வாகனம், டிராக்டர், ஜீப் என பலதரப்பட்ட வாகனங்களில் சென்று பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

19ம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிவருகிறார். அரசின் மீதுள்ள கோபத்தை பாதிக்கப்பட்டவர்கள் கனிமொழியிடம் காட்டினாலும், பொறுமையுடன் கேட்டு அவர்களுக்கான உதவிகளை தொடர்ந்துவருகிறார். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், ‘கலைஞரின் மகளா கனிவுடன் நம் கோரிக்கைளை கேட்கிறார்?’ என வியக்கும் அளவிற்கு கனிமொழி எம்.பி.யின் நடவடிக்கை இருக்கிறது.

இந்த நிலையில்தான் இன்றைய தினம் தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கியிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் ஆவேசமாக பேசிய போதும், மிகவும் பொறுமையுடன் அவர்களது ஆதங்கத்தைக் கேட்டு, அவர்களின் குறைகளை போக்க உடனடியாக நடவடிக்கை எடுத்த கனிமொழிக்கு தூத்துகுடியில் பாதிக்கப்பட்ட மக்கள் பாராட்டி வருகின்றனர்’’ என்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளபாதிப்பில் பாதிக்கப்பட்ட மக்களை தெருத் தெருவாக இரவு பகல் பார்க்காமல் நேரடியாக சந்தித்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் கனிமொழியை தூத்துக்குடி மக்கள் வியந்து பார்க்கிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal