கடந்த 1977 மக்களவைத் தேர்தலின் (எமர்ஜென்சி) போது பிரதமர் முகம் முன்னிலைப்படுத்தப்படவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ள கருத்துக்கு இண்டியா கூட்டணியில் மீண்டும் விரிசல் வெளிப்பட்டுள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது.
வரும் 2024 மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில், கூட்டணியில் உள்ள சில கட்சிகள் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை முன்மொழிந்துள்ளன. இந்தநிலையில் தேசியவாத காங்கிஸின் தலைவர் சரத் பவார், பிரதமர் முகத்தை முன்னிலைப்படுத்தாததால் பாதிப்புகள் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சரத்பவார், “கடந்த 1977 தேர்தலில் (எமர்ஜென்சி) பிரதமர் முகம் முன்னிலைப்படுத்தப்படவில்லை. தேர்தல் முடிந்த பின்னர் மொரார்ஜி தேசாய் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலுக்கு முன்பு அவர் பெயர் எங்கும் சொல்லப்படவில்லை. அந்தத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் முகம் முன்னிலைப்படுத்தப்படாததால் எந்த விளைவுகளும் ஏற்படவில்லை. மக்களிடத்தில் மாற்றத்துக்கான மனநிலை இருந்தால் அதற்கான முயற்சியையும் வேலையையும் மக்களே முன்னெடுப்பார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் சரத் பவாரின் பேச்சு குறித்து இண்டியா கூட்டணியில் மீண்டும் விரிசல் வெளிப்பட்டுள்ளது என்று பாஜக செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா விமர்சித்துள்ளார். இதுகுறித்த எக்ஸ் தள பதிவொன்றில் அவர், “இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகமாக கார்கேவை மம்தாவும் ஆம் ஆத்மி கட்சியும் முன்மொழிந்த சில நாட்களில் சரத் பவார் அதனை நிராகரித்துள்ளார். எப்படி ஐக்கிய ஜனதாதளம் எம்எல்ஏ கார்கேவை மறுத்து நிதிஷ் குமாருக்காக வாதாடினார் என்று நாம் பார்த்தோம். ராகுலுக்கு எதிராக கார்கேவின் பெயரை மம்தா சொல்லியதை காங்கிரஸ் கட்சியே ரசிக்கவில்லை.
கூட்டணியின் விரிசல் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. சமீபத்தில் கேரளாவில் காங்கிரஸ் இடதுசாரிகளுக்கு இடையே மோதல், பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆம் ஆத்மிக்கு இடையே மோதல், மேற்கு வங்கத்தில் டிஎம்சி இடதுசாரிகளுக்கு இடையே மோதலைப் பார்த்தோம், இப்போது இது.
நான்கு சந்திப்புகளில் இன்னும் கூட்டணிக்கான சின்னத்தைக் கூட தீர்மானிக்கவில்லை. அவர்களிடம் இலக்கும், தொலைநோக்குப் பார்வையும் இல்லை. அவர்களுக்கு இருப்பதெல்லாம் ஒரே ஒரு நோக்கம் தான், சனாதனம் இந்து மதம் மற்றும் அரசியல்சாசன பதவிகளை தாக்குவது அவமானப்படுத்து” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடிக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. மோடி மீண்டும் பிரதமராக மக்கள் ஆதரவளிப்பார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, பிஹார் தலைநகர் பாட்னாவில் நிதிஷ் குமார் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மறைந்த தலைவர் வாஜ்பாயை மிகவும் மதிக்கிறேன். எனது வாழ்நாள் முழுவதும் அவருக்கு மரியாதை செய்வேன்.
இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக கார்கே பெயர் முன்மொழியப்பட்டதில் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. இண்டியா கூட்டணியில் நான் எந்தப் பதவியையும் விரும்பவில்லை. கூட்டணியில் தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஐக்கிய ஜனதா தளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக சிலர் (பாஜக தலைவர்கள்) கூறுவதில் உண்மை இல்லை. இண்டியா கூட்டணியிலும் எவ்வித விரிசலும் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.