கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வாயிலாக இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பாரபட்சம் நடந்திருப்பதாக சில மூத்த பத்திரிகையாளர்கள் குமுறுகின்றனர்.
இது பற்றி மூத்த பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சென்னை பத்திரிகையாளர் மன்றம் வாயிலாக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெள்ள நிவாரண நிதியாக பத்திரிகையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம், ஒரு சிப்பம் அரிசி, மளிகை பொருட்கள் வழங்கினார். இதற்காக முன்கூட்டியே முறையாக அழைப்பு விடுத்தும், குறிப்பட்டவர்களுக்கு மட்டுமே டோக்கன் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதன் பிறகு பத்திரிகையாளர் மன்றத்தின் மேலாளரை சிலர் நேரில் சந்தித்து கேட்டபோது, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு இரண்டாவது தவனை வழங்குதில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்றார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.
கொரோனா கால கட்டத்தில் அ.தி.மு.க. அரசும், தி.மு.க. அரசும் செய்தித்துறையின் வாயிலாக நிவாரணம் வழங்கியது. இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதுபோல், மழைவெள்ள நிவாரண நிதியை அமைச்சர் உதயநிதி வழங்கியிருக்க வேண்டும். அதைவிடுத்து, ஒரு பத்திரிகையாளர் மன்றத்தில் வாயிலாக கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்? இதில் பாரபட்சம் இல்லாமல் எப்படி வழங்கப்படும்?
ஒரு அமைச்சராக இருப்பவர் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் அரவனைத்துச் செல்லவேண்டுமே தவிர, ஒரு மன்றத்தின் பேச்சை கேட்டுக்கொண்டு செயல்படலாமா? இனியாவது செய்தித்துறையின் வாயிலாக கொடுக்க வேண்டும்’’ என்ற கோரிக்கையினை வைத்து வருகின்றனர்.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் வாயிலாக யார் யாருக்கு நிவாரணத் தொகை கொடுக்கப்பட்டது என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிடத் தயாரா? என உண்மையிலேயே பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்..!