அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று (டிச.26) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தொடங்கிய கூட்டத்தில் உற்சாகம் களைகட்டியது. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் ஆன பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் வரவேற்பு பேனர்கள் முதல் கூட்ட அரங்கு வரை எல்லாவற்றிலும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். கூட்டத்தில், சென்னை மழை வெள்ளம், தென்மாவட்ட பெருமழையினால் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி வரவேற்புரை ஆற்றினார். அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கட்சியின் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். அதன்பின்னர் பொதுக்குழு தீர்மானங்கள் முன்மொழியப்பட அவற்றை எடப்பாடி பழனிசாமி வழிமொழிய, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
வடகிழக்குப் பருவமழையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும், மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள முன்பே திட்டமிடாமலும், காலத்தே மீட்புப் பணிகளை எதிர்கொள்ளாமலும் மக்களை கடும் சிரமத்துக்கு உள்ளாக்கியதோடு, புயலின் தாக்கத்தால் பெய்த பெருமழையின் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்படும் மக்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த நிவாரண உதவிகளை வழங்காத விடியா திமுக அரசுக்கும் கடும் கண்டனம். பௌருளாதார இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் வெள்ள நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், ஆவின் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றையும் சுட்டிக் காட்டி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவற்றுடன் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்களின் விவரம் வருமாறு: 1. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வழியில் ஆளுமைத் திறனோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று கழகத்தை வழிநடத்தி வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி மு. பழனிசாமிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.
- தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் தன் உயிர் மூச்சாக முன்னிறுத்தி தொடங்கப்பட்ட
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்கிற மாபெரும் மக்கள் இயக்கம், மதுரையில் நடத்திய
கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ வரலாற்று வெற்றி பெற்றதற்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. - வட கிழக்குப் பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும்; ‘மிக்ஜாம்’ புயலை எதிர்கொள்ள முன்பே திட்டமிடாமலும்; காலத்தே மீட்புப் பணிகளை மேற்கொள்ளாமலும், மக்களை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியதோடு, புயலின் தாக்கத்தால் பெய்த பெருமழையின் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்படும் மக்களுக்கு, அவர்கள் எதிர்பார்த்த நிவாரண உதவிகளை வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்; பொருளாதார இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் வெள்ள நிவாரண உதவிகளை வழங்கிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- அ, தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையின் நடவடிக்கைகளை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்போது வேண்டுமென்றே, திட்டமிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பேச்சை ஒளிபரப்பச் செய்யாமல் இருட்டடிப்பு செய்வதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஆ) எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை சம்பந்தமாக சட்டமன்ற மரபுகளை இதுவரை கடைபிடிக்காத பேரவைத் தலைவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
- மீனவர்கள் நலன் பாதுகாக்க, திமுக-வால் தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள விடியா திமுக அரசுக்கு வலியுறுத்தல் மற்றும் இலங்கை கடல் கொள்ளையர்களால் வாழ்வாதாரம் இழந்த மீனவ மக்களை வஞ்சிக்கும் விடியா திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
- மாநில உரிமைகள் பறிபோனதற்கு தி.மு.க-வே முழுமுதற் காரணமாக இருந்துவிட்டு, தற்போது மக்களின் கவனத்தை திசை திருப்பவும்; பொய்யான 520 வாக்குறுதிகளை அளித்து, அவற்றை நிறைவேற்ற முடியாமல் மக்களை ஏமாற்றவும், 16 பல்வேறு நாடக அரங்கேற்றங்களை நிகழ்த்தும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
- சட்டம்-ஒழுங்கு சீரழிவுக்கும், திமுக-வின் மக்கள் விரோதப் போக்கிற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
- ஊழலில் திளைத்து நிற்கும் திமுக! `கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன்’ என்பதே திராவிட மாடல் ஊழல் ஆட்சியின் தாரக மந்திரம்; ஊழல் ஆட்சியை நடத்தும் பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
- சிறுபான்மையின மக்களான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுடைய நலன்களைப் பாதுகாக்கவும்; 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவும், விடியா திமுக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
- நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 13.12.2023-ஆம் தேதி பாதுகாப்பு குறைபாட்டால் நடந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது; ஜனநாயக அமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
- ஈழத் தமிழர்கள் நலன் காக்க, ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டி மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது.
- தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பல்வேறு மாவட்டங்களில் கடுமையாக பெய்து நெற்பயிர்கள் மற்றும் வேளாண் பயிர்கள் வெள்ளத்தால் மூழ்கி பெரும் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், உரிய நிவாரணம் வழங்காமல் விவசாயிகளை வஞ்சித்து வரும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
- நெசவாளர்களின் வாழ்க்கை நலிவடையக் காரணமாக இருந்து, நெசவுத் தொழிலை விடுத்து மாற்றுத் தொழிலைத் தேடும் நிலையை ஏற்படுத்தி, தமிழ் நாட்டில் நெசவுத் தொழிலையும், நெசவுத் தொழிலாளர்களின் நலனையும் பாதுகாக்கத் தவறிய விடியா திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
- சமூக நீதியை வாய்கிழியப் பேசும் திமுக, பட்டியலின மக்களுடைய நலனில் அக்கறை கொள்ளாமல் அவர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பறித்தும்; அனுபவிக்க முடியாமல் தடுத்தும்; அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகைகளை தட்டிப் பறிக்கும் வகையில் செயல்படும் விடியா திமுக அரசின் பட்டியலின மக்கள் விரோதப் போக்கிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
- தமிழக உயர்கல்வியின் தரம் குறையும் வகையில், கல்வியாளர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அவசர கதியில் பொதுப் பாடத் திட்டத்தை அமல்படுத்தத் துடிக்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
- வீ) தாய் மொழியாம் தமிழ் உள்ளிட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் 8-ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மாநில மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் அலுவல் மொழிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது. வீவீ) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியைக் கொண்டுவர வலியுறுத்தப்பட்டது.
- சமூக நீதியை குழிதோண்டிப் புதைத்து, சமூக நீதிக்கு எதிரான திமுக-வின் மக்கள் விரோதப் போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
- தமிழகத்தின் ஜீவாதார உரிமையான காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் திமுக-வின் சந்தர்ப்பவாதம் மற்றும் துரோகத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
நீட்’ என்னும் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும்; ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தே
நீட் தேர்வு’ ரத்துதான் என்று விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினும், திமுக-வைச் சேர்ந்தவர்களும் மக்களை ஏமாற்றி வாக்குறுதி அளித்தனர். சொன்னதைச் செய்வோம் என்று கூறி மக்களை ஏமாற்றிய விடியா அரசின் முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம்! எ தமிழ் நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கத் தவறியும்; பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கத் தவறியும்; வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நோய்த் தொற்று அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ உதவிகளைச் செய்யத் தவறியும், முடங்கிப் போயிருக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும், விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.- மக்கள் நலன் கருதி புரட்சித் தலைவி அம்மா அரசு கொண்டுவந்த திட்டங்களை முடக்குவது; விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறியது; சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணத்தில் இருந்து ஆவின் பால் விலை வரை உயர்த்தி, மக்களை வஞ்சித்து வரும் சர்வாதிகார விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலும்; புதிய அணை கட்டப்போவதாக நெருக்கடி கொடுக்கும் திமுக-வின் கூட்டணிக் கட்சி ஆட்சியில் இருக்கும் கேரள அரசின் செயலை கண்டிக்காமலும்; அதைத் தடுக்க சட்டப் போராட்டம் நடத்தாமலும் மெத்தனப் போக்கில் இருந்து வரும் மக்கள் விரோத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
- ஜனநாயகத்தில் வாக்களிக்கும் உரிமையை அனைவரும் பெற்றிடும் வகையில், எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், தகுதியுடைய அனைவரும் வாக்களிக்க ஏதுவாக, குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியல் அமைந்திட இந்தியத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தப்பட்டது.
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என உறுதி மேற்கொள்ளப்பட்டது.