தமிழகத்தில் 2004 டிசம்பர் 26-ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 1,017 பேர் உயிரிழந்தனர் சுனாமி தாக்கி 19 ஆண்டுகளை கடந்த பின்னரும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் தவிப்பது ஒருபுறமிருக்க, வாழ்க்கை தரத்திலும் முன்னேற்றமில்லாத நிலையிலேயே உள்ளனர்.
கன்னியாகுமரி, குளச்சல், கொட்டில்பாடு, மணக்குடி, ராஜாக்கமங்கலம், அழிக்கால், பிள்ளைத்தோப்பு போன்ற மீனவ கிராமங்களில் சுனாமியின்போது அதிகமானோர் உயிரிழந்ததையடுத்து அவர்களுக்காக அங்கு நினைவு சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுனாமி தாக்கி இன்றுடன் 19 ஆண்டுகள் கடந்தாலும், இயற்கை பேரிடர் நிகழ்ந்தால் மீனவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்கிறது. எனவே இயற்கை சீற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ள நவீன உபகரணங்களை வழங்குவதுடன், மீனவர்கள் அடங்கிய மீட்புக் குழுவை அரசு அதிக அளவில் ஏற்படுத்தி தர வேண்டும் என்று மீனவ குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர். கொட்டில்பாடு மீனவ கிராமங்களில் சுனாமியால் உறவினர்களை இழந்த மீனவர்கள் இதுகுறித்து கூறியதாவது:
மீன்பிடித் தொழில் என்றாலே நித்தம் போராட்டம் தான். சூறைக்காற்று, கடல் சீற்றத்தால் அடிக்கடி மீன்பிடி பணிகள் பாதிக்கும். ஆனால் சுனாமி வந்த பின்னர் குமரி கடல் பகுதிகளில் அடிக்கடி இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஆழ்கடலில் ஏற்படும் இயற்கை மாற்றங்களாலும் அடிக்கடி மீன்பிடி பணி பாதிக்கப்பட்டு வருகிறது. பாதி நாட்கள் கூட கடல் தொழிலுக்கு செல்லமுடியவில்லை. ஒக்கி புயல் தாக்குதலின் போதும் சுனாமியை போன்ற பாதிப்பு குமரி கடற்கரை கிராமங்களில் நிகழ்ந்தது.
சுனாமியால் பாதித்தபோது அரசு நிதியுதவி செய்தாலும், ஒவ்வொரு குடும்பத்திலும் கடல் தொழிலுக்கு சென்று வருமானம் ஈட்டிக் கொடுத்த தந்தை, சகோதரன் போன்றவர்கள் உயிரிழந்ததால் இதுவரை மீளமுடியாமல் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். பெண்கள் அன்றாடம் தலைச்சுமையாக மீன்களை சுமந்து விற்று குழந்தைகளை காப்பாற்றி வருகின்றனர்.
எனவே, இதுபோன்ற பேரிடர்கள் நிகழும்போது தற்காத்துக் கொள்ள உரிய முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்த வேண்டும். கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் தளம் உள்ள நிலையில் மீனவர்களின் மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர் வசதியுடன் நிரந்தர பேரிடர் மீட்பு மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றனர்.
குளச்சல் பகுதி மீனவர்கள் கூறும்போது, ‘‘கடலில் படகுகளை செலுத்தமுடியாத வகையில் கடல் உள்நீரோட்டம் 10 ஆண்டுகளுக்கு மேலாக அதிகரித்துள்ளது. சமீப காலங்ளில் இயற்கை சீற்றங்களால் 80 சதவீத படகுகள் கரைப்பகுதியிலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது. மீன்பிடித்தலுக்கு நிகரான மாற்றுத்தொழிலுக்கும் செல்ல முடியவில்லை. எனவே, மீன்பிடித்தலின்போது மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய பாதுகாப்பை ஏற்படுத்தி தரவேண்டும்’’ என்றனர்.