கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு கூடுதல்நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘‘சென்னையில் மிக்ஜாம் புயலின்போது முன்னெச்சரிககை நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதை படிப்பினையாகக் கொண்டு தென் மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இந்திய வானிலை ஆய்வு மையத்தை குறை கூறிக்கொண்டு, மக்களுக்கு உரிய நேரத்தில் தேவையான உதவிகளை செய்யாமல் தட்டிக்கழிப்பது வேதனையளிக்கிறது. மாநில அரசு இயற்கைச் சீற்றத்தின்போது, அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். சொந்த நிதியில் இருந்து நிவாரணம் வழங்க வேண்டும்.
கடந்த வாரம் தென் மவட்டங்கள்கனமழையால் பாதிக்கப்பட்டபோது, முதல்வர் தேர்தல் கூட்டணிகுறித்து பேச டெல்லி சென்றுவிட்டார். கனமழையால் தென் மாவட்டமக்கள் உடமைகளை இழந்துள்ளனர். வியாபாரிகள் விற்பனைப் பொருட்களை இழந்துள்ளனர். பயிர்கள் நீரில் மூழ்கி, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கியதில், 100 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் 7 நாட்களாகியும் தண்ணீர் வடியாததால், பலபகுதிகளில் மழை நீர் தேங்கி, கால்நடைகள் இறந்து மிதக்கின்றன. தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு திமுக அரசு அறிவித்த ரூ.6 ஆயிரம் நிவாரணம் குறைவானது. இதை ரூ.15 ஆயிரமாக உயர்த்த வேண்டும். எனவே, வெள்ள சேதத்தை முழுமையாக கணக்கெடுத்து உரியநிவாரணம் அளிப்பதுடன், மீண்டும் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களைக் கொண்டுவரும் வாகனங்களை வழிமறித்து மக்களே பொருட்களை எடுத்துச்செல்லும்நிலை உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அனைத்துப் பகுதிகளுக்கும் விடுபடாமல் நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டும்.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பை, கழிவுகளை அகற்றி,சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி, சுகாதாரப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்’’ இவ்வாறு பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.