வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி கட்சி ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் சில மாற்றத்தைக் கொண்டுவரப் போவதாக மூத்த ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவித்தனர்.

இது பற்றி மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம். ‘‘சார், அதிமுகவின் பொதுக்குழு நாளை 26 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் முக்கியத்துவம் வாய்திருந்ததாக பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை ஏற்ற பின் நடக்கும் முதல் பொதுக்குழு எல்லோராலும் உற்று நோக்கப்படும். இந்த பொதுக்குழுவில் குழப்பம் வந்து விடக்கூடாது என்பதில் அதிகம் அக்கறையுடன் செயல்படுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. சிறப்பு அழைப்பாளர் என்ற முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு இல்லை. இந்த முறை தேர்தலுக்கு கமிஷனில் சமர்ப்பிக்க வேண்டிய பல்வேறு விஷயங்கள் உள்ளதால் இந்த கண்டிப்பு பொதுக்குழுவிற்கு.

செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் பிளவு ஏற்பட்டு, பிறகு பல்வேறு போராட்டங்களை கடந்து பொதுச்செயலாளரானவுடன் லகானை கையில் இருந்து திடமான முடிவு எடுக்கிறார் என்று பரவலான பேச்சு தமிழ்நாட்டில் வந்திருக்கிறது.

அதிலும் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. வெளியேறியது சிறுபான்மை இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவ மக்களிடம் நற்பெயரை பெற்று தந்திருக்கிறது. எடப்பாடியாரும் தொடர்ச்சியாக சிறுபான்மை மக்களுக்கான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டே வருகிறார். இதில் தி.மு.க.வின் பொய்ப் பிரச்சாரம் எடுபடாது.

வடகிழக்கு பருவமழை மிக்ஜாம் புயலால் சென்னை அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது சமீபத்தில் தென் மாவட்டத்தை புரட்டிப்போட்ட மழை வெள்ளத்தால் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் எல்லாம் சேர்த்து எடப்பாடியாருக்கு பலமாக அமைந்துவிட்டது. அவரும் வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு ஆறுதல் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி, அதிமுக, சீமான் ஆகிய நான்கு முனை போட்டி இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்லுகின்றார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை விட திமுக 1,92,000 வாக்குகள் அதிகம் பெற்று ஆட்சியை கைப்பற்றியது அப்போது அதிமுக பாஜக கூட்டணியில் இருந்தது. டிடிவி 15 முதல் 20 தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று அதிமுக வெற்றியை பாதித்தது. ஓ.பன்னீர்செல்வம் தென் மாவட்டங்களில் இறங்கி தேர்தல் பணி பார்க்கவில்லை அதன் எதிரொலியாக தான் ஒற்றை தலைமை கோஷம் எழுந்து கட்சி எடப்பாடி கைக்கு வந்தது.

நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரை எடப்பாடி பழனிச்சாமி சற்று நம்பிக்கையாக தான் இருக்கிறார். திமுகவுக்கு மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. அதே சமயம், ஓ.பன்னீர், டி.டி.வி., சசிகலா ஆகிய மூவருக்கும் சொல்லிக்கொள்ளுபடி ஆதரவு இல்லை’’ என்றவர்கள் அடுத்துப் பேசியதுதான் அதிர்ச்சி ரகம்.

அதாவது, ‘‘வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரி உள்பட 40 இடங்களையும் கைப்பற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வியூகம் அமைத்து வருகிறார். அதனால் போட்டியிடும் வேட்பாளர்களை அவரே முன்னின்று தேர்வு செய்யவிருக்கிறாராம். சில தொகுதிகளுக்கு வேட்பாளர் யார் என்பதையும் முடிவு செய்துவிட்டார்.

அப்படியிருந்தும், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் தி.மு.க.வுடன் ரகசிய உறவில் இருக்கிறார்கள். இது பற்றி எடப்பாடி பழனிசாமிக்கும் தகவல்கள் போயிருக்கிறது. இவர்களின் ‘மறைமுக நட்பு’ இப்படியே தொடர்ந்தால், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு உள்ளடி வேலைகள் நடக்கும். மேலும், தென் மாவட்டங்களில் உள்ள முக்கியப் புள்ளிகள் சிலர் சசிகலா, டி.டி.வி., ஓ.பி.எஸ்.ஸுடன் ரகசிய உறவில் இருக்கிறார்கள்.

எனவே, தி.மு.க.வுடன் ரகசிய தொடர்பில் இருக்கும் மா.செ.க்களை களை எடுக்கவும், இரண்டு எம்.எல்.ஏ. தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்கவும் எடப்பாடி முடிவெடுத்திருக்கிறார். இதில் நாடாளுமன்றம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலரே மா.செ.வாக்கினால்தான், உள்ளடி வேலைகள் குறையும் என மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூறி வருகின்றனர். எனவே, எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழுவிற்குப் பிறகு கட்சியில் அதிரடி மாற்றத்தை அரங்கேற்றினால்தான், நாளை நமதே… நாற்பதும் நமதே… என வெற்றி நடைபோடலாம்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal