உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் இந்தியை மட்டும் கற்றவர்கள் தமிழ்நாட்டிற்கு கட்டிடங்கள் கட்டவும், கழிவறைகளை சுத்தம் செய்வதற்கும் வருகின்றனர் என்று திமுக எம்.பி தயாநிதி மாறன் கூறியதற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள் கூறும் சில கருத்துகள் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சனாதனம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு தேசிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. இதை தொடர்ந்து 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது குறித்து பேசிய திமுக எம்.பி செந்தில் குமார் ‘ பசு கோமிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதாக கூறியது சர்ச்சை வெடித்தது. பின்னர் அவர் தான் பேசியது குறித்து மன்னிப்பு கேட்டார்.

சமீபத்தில் டெல்லியில் நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் இந்தி பேச்சை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்குமாறு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு எம்.பி கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த நிதிஷ்குமார் “ இந்தி நம் தேசிய மொழி, தேசிய மொழியை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எனவே நீங்கள் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்தி பேசும் மக்கள் குறித்து திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசிய பழைய வீடியோ ஒன்றை பாஜகவினர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் பேசும் தயாநிதி மாறன் “ ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஐ.டி நிறுவனங்களில் நல்ல சம்பளத்திற்கு வேலைக்கு செல்கின்றனர். ஆனால் சிலர் இந்தி, இந்தி என கூறுகின்றனர். பீகார், உத்தரப்பிரதேசத்தில் இந்தியை மட்டும் கற்றவர்கள் தமிழ்நாட்டுக்கு கட்டிடங்கள் கட்டவும், கழிவறைகளை சுத்தம் செய்யவும் வருகின்றனர். இந்தியை மட்டும் கற்றுக்கொண்டால் இதுதான் நிலைமை” என்று தெரிவித்தார்.

தயாநிதி மாறனின் இந்த பேச்சுக்கு பீகார் துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ எந்த கட்சி தலைவராக இருந்தாலும் சரி, இதுபோன்ற கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். இந்தியா ஒரே நாடு. மற்ற மாநில மக்களை நாங்கள் மதிக்கிறோம்.. அதே போல அனைவரும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்..” என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சரும் பீகார் பாஜக தலைவருமான கிரிராஜ் சிங் “ நாட்டை துண்டாக்குவது தான் காங்கிரஸ் மற்றும் திமுகவின் வேலை. பீகார் மக்கள் எங்கு சென்றாலும் கடினமாக உழைக்கின்றனர். தன் மானத்துடன் அவர்கள் உழைப்பது குற்றம் இல்லை. சனாதானத்தை ஒழிப்போம் என்று கூறியவர்கள், இப்போது தொழிலாளர்களை புண்படுத்தி உள்ளனர். இதுபோன்ற கருத்துக்களை கேட்டு ராகுல்காந்தி கேட்டு மகிழ்வது வருத்தத்திற்கு உரியது” என்று தெரிவித்தார்.

திமுக தலைவரின் இந்த கருத்துக்கு தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை நிதிஷ்குமாரும், ராகுல் காந்தியும் விளக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அமித் மாள்வியா தெரிவித்துள்ளார்.

இதனிடையே தயாநிதி மாறன் இந்தி பேசும் மக்கள் குறித்து பேசிய வீடியோ 4 ஆண்டுகள் பழமையானது என்று திமுக தெரிவித்துள்ளது. வெள்ள நிவாரண கோரிக்கையில் தமிழக அரசுக்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கவனத்தை திசை திருப்ப பாஜக மீண்டும் பரப்புகிறது” என்று குற்றம்சாட்டி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal