அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை மீண்டும் ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பார் என உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்திருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் ஆனந்த் வெங்கடேஷ். இந்நிலையில் தான் அவர் தாமாக முன்வந்து சில வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். அதாவது முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகளை அவர் அவர் தாமாக முன்வந்து விசாரித்தார். திமுக மற்றும் அதிமுக தலைவர்களின் பல்வேறு வழக்குகளை அவர் கையில் எடுத்தார். திமுகவை பொறுத்தமட்டில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சரான கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி உள்ளிட்டோரின் வழக்குகளை அவர் விசாரிக்க தொடங்கினார்.

அதேபோல் அதிமுகவை பொறுத்தமட்டில் முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோரின் வழக்குகளையும் தாமாக முன்வந்து விசாரித்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதற்கிடையே தான் கடந்த அக்டோபர் மாதம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பணிமாற்றம் செய்யப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டார். இது வழக்கமான நடைமுறை தான். அதாவது 3 மாதத்துக்கு ஒருமுறை நீதிபதிகள் இப்படி இடமாற்றம் செய்யப்படும் நடைமுறை உள்ளது. அதனடிப்படையில் தான் ஆனந்த் வெங்கேடஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து மதுரை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.

தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேசின் 3 மாத பணி என்பது முடிவுக்கு வர உள்ளது. இதனால் மீண்டும் அவர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு திரும்ப உள்ளார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை நடத்த உள்ளார். தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட தற்போதைய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான வழக்குகள் ஆனந்த் வெங்கடேஷ் முன்பு பட்டியலிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்களின் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள். இதனால், மினிஸ்டர்கள் மிரட்சியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal